செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு | தினகரன்


செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள்  செய்யவேகூடாது என்ற மரபு இன்றளவும் உள்ளது. பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்கும்  செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.                         

விநாயகர் பிள்ளையார் நோன்பு, சங்கடஹர  சதுர்த்தி, வெள்ளி பிள்ளையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம் என கணபதி  வழிபாட்டில் பலவகை. அவற்றில் கடைசியாக கூறப்பட்ட இரண்டு விரதங்களும்  முழுக்க முழுக்க பெண்களாலேயே அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக,  செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள் செய்யவேகூடாது என்ற மரபு  இன்றளவும் உள்ளது. இவ்வழிபாடு தோன்றிய வரலாற்றை சற்று கவனிப்போம்.

ஒரு ஏழைக்குடியானவனுக்கு ஏழு மகன்கள், ஒரு பெண். மனைவி இறந்து விட்டாள்.  தந்தையும் பிள்ளைகளும் அன்றன்று கூலி வேலை செய்து நெல் வாங்கி வருவார்கள்.  அந்த நெல்லை குத்திப் பொங்கி யாவரும் புசிப்பர். ஆனால், வாங்கி வரும் கூலி  நெல் அவ்வளவும் பதராகவும், உமியாகவுமே இருக்கும். அந்தப் பெண்ணோ, பொறுமையை  இழக்காமல், அதையும் பக்குவமாக்கி அவர்களுக்கு அளித்துவிட்டு, வடித்த  கஞ்சியைதான் உண்டு காலம் கழித்து வந்தாள்.

ஒருநாள் கடும்பசியோடு ஔவை பாட்டி, இந்த வீட்டுக்கு வந்தாள். ஆடவர்கள்  வேலைக்குப் போயிருந்தனர். ஔவை வெளியில் நின்றுகொண்டே, அம்மா! பசிக்கிறது.  அன்னம் போடு" என்று உரக்கக் கூறினாள். அப்பெண் அரையாடையோடு இருந்ததால்,  வெளிவந்து பதில் சொல்ல வெட்கித்தாள். அதே சமயம், ‘ஔவையாச்சே, எப்படி இல்லை  என்று கூறுவது’ என்று தத்தளித்து, தேம்பித் தேம்பி அழுதாள். ஔவையின் மனம்  இளகியது. ஏன் அழுகிறா?" என்றாள் ஔவை. அப்பெண் தன் நிலைமையை விளக்கலானாள்.

பாட்டி என் ஏழு அண்ணன்மார்களும், தகப்பனாரும், கொண்டு வரும் நெல் மொத்தமும்  குத்த குத்த உமியும், பதருமாகப் போய்விடுகிறது. ஆதனால், அரை  வயிற்றுக்குக்கூட போதவில்லை. இந்நிலையில் எப்படி உனக்கு அன்னமிடுவது?"  என்று அழுதாள்.

இதைக்கேட்ட ஔவை மனம் இளகியது. அப்படியா... சரி. இந்தா! நான் பிச்சை எடுத்த  அரிசி கொஞ்சம் உள்ளது. ஒரு தேங்காயும் அதோடு தருகிறேன். என்னை  நினைத்துகொண்டு, செவ்வாய் பிள்ளையார் விரதம் ஏற்றுக்கொள். அப்புறம் பாரேன்,  உன் அதிர்ஷ்டத்தை" என்றவள், பூஜை முறையை விவரமாக அப்பெண்ணுக்குக் கூறி  விடைபெற்றாள்.

அடுத்த செவ்வாய்கிழமை. அண்ணன்களும், தகப்பனும் உறங்கியபின்பு, நீராடி  நோன்பைத் தொடங்கினாள் அந்தப் பெண். ஆனால், அடுப்பு பற்ற வைக்க வீட்டில்  நெருப்பு இல்லை.

என்ன செய்வது? எங்கேயாவது வெளிச்சம் தெரிந்தால், அங்கு  சென்று நெருப்பு எடுத்து வரலாம் என்று ஊருக்கு வெளியே போனாள். ஓரிடத்தில்  புன்னை மரமும், புளிய மரமும் இணைந்து உயர்ந்து வளர்ந்திருந்தன. அதில் ஏறி  புன்னை மரக்கிளையில் ஒருகாலும், புளியமரக் கிளையில் ஒரு காலும் வைத்து  தொலைதூரம் நோக்கினாள்.

தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டாள். அந்த இடத்துக்கு ஓடினாள். அது சுடுகாடு.  அங்கே பிணம் எரிந்து கொண்டிருந்தது. ஆனாலும், அவள் அஞ்சவில்லை.

நெருப்பை  எடுக்க, சிதை அருகில் சென்றாள். பிணத்தை எரித்துக்கொண்டிருந்த வெட்டியான்  கம்பை ஓங்கிக்கொண்டு அவள் அருகே வந்தான்.

ஏய், நீ யார்? மனிதப் பிறவியா அல்லது பேய் பிசாசா? சொல்" என்று அதட்டினான். அவள் தன் நிலையைச் சொல்லி நெருப்பு கேட்டாள்.

அப்படியா? நானும் உனக்கு அரிசியும், தேங்காயும் கொடுக்கிறேன். அதையும்  எடுத்துப் போய், என் சார்பாகவும் பிரார்த்தனை செய்" என்று கூறி, வெட்டியான்  தணலை வாரி ஓர் வறட்டியில் வைத்துக்கொடுத்தான். அதை வாங்கிய அப்பெண்,  வீட்டுக்கு திரும்பி வரும் போது, வழியில் இருந்த புன்னை மரத்திலிருந்தும்  புளிய மரத்திலிருந்தும் தழைகளை பறித்து கொண்டு, தன் வீடு அடைந்தாள்.

நோன்பை பயபக்தியுடன் தொடங்கினாள். ‘வெட்டியான் இல்லாவிட்டால் நெருப்பு  கிடைத்திருக்குமா? அந்நேரத்தில் பிணம் எரியவில்லை என்றாலும் நெருப்பு  கிடைத்திருக்காதே’ என்று அவள் மனம் எண்ணியது. எனவே, அவர்கள் நினைவாக  வெட்டியானைப் போலவும், பிணத்தைப் போலவும் இரு உருவங்களை மாவினால் செய்து,  அவற்றையும் கொழுக்கட்டையோடு வைத்து வேகவைத்தாள். ஔவை கூறியபடியே கணபதி பூஜை  செய்து முடித்தாள்.

இப்பூஜையின் பலன் சில நாட்களுக்குள்ளேயே உயர்வை அளித்தது. அவர்கள் நிலையும்  உயர்ந்தது. குடும்பத்தில் பணம் கொழித்தது. எல்லோரும் எண்ணிப்  பார்க்கக்கூடிய அளவுக்கு வாழ்க்கை மிக உயர்ந்தது. குடும்பம் இவ்வாறு தேறவே,  அண்ணன்மார்கள் அனைவருக்கும் விரைவில் மணம் முடித்துவைத்தாள். அண்ணன்கள்  அவளுக்கு ஏற்ற வரனைத் தேடினர். காலம் கூடிற்று. அப்பெண்ணை செல்வந்தர்  ஒருவர் மணந்து கொண்டார்.

புகுந்த வீட்டுக்கு போகும் முன், அப்பெண் தனது அண்ணிகளை அழைத்து, மிக  ரகசியமாக, செவ்வாய் பிள்ளையாரை வழிபடும் முறையையும், அதனால் தானடைந்த  பலனையும் விளக்கினாள்.

நாட்கள் நகர்ந்தன. ஆனால், அண்ணிமார்கள் உள்ளத்தில் செல்வச் செருக்கு  எழுந்தது. இதனால் கடவுள் மீது அன்பு குறைந்தது. செய்யக்கூடாத குற்றங்களை  எல்லாம் அவர்கள் செய்தார்கள். அதன் விளைவு? ஊர் ஊராகப்போய் அலைந்து பிழைக்க  வேண்டிய நிலை வந்தது. இந்தச் சமயத்தில் தங்கை, தமையன் வீட்டுக்கு வந்தாள்.  வீட்டின் நிலை கண்டு அதிர்ந்தாள். இதற்கான அடிப்படை காரணத்தையும்  அறிந்தாள். எனவே, அண்ணிகளுக்கு அறிவூட்டத் தொடங்கினாள்.

விரைவில் அண்ணிகள்  அனைவரும் பயபக்தியுடன், செவ்வாய் பிள்ளையார் பூஜையை சிறப்பாகவும்  உள்ளன்போடும் நடத்தினார்கள். இதனால் விரைவிலேயே அவர்களிடம் மீண்டும் செல்வம் பெருகிற்று; வாழ்க்கை வளமடைந்தது.     


Add new comment

Or log in with...