வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை | தினகரன்


வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை

வாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை முறியடித்து அதனை இயங்கச் செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.  

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயங்க செய்வது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று நேற்று முன்தினம் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம் செய்து ஆலையின் நிலவரத்தை பார்வையிட்டது.  

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

எமது நாட்டுக்கு கடதாசி ஆலை மிக வருமானத்தை பெற்றுத்தந்த ஒரு நிறுவனமாக செயற்பட்டது. இதனை இழுத்து மூடுவதற்கு ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ விருப்பம் கிடையாது. இந்த ஆலையை புனரமைத்து மீண்டும் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இந்த ஆலை அரசாங்கத்தினாலோ அல்லது தனியார் நிறுவனங்களின் உதவியைப் பெற்றோ மீண்டும் இயங்க செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லாப் பிரச்சினைக்கு இந்த கடதாசி ஆலை தீர்வாக அமையும் என்றார்.  

இந் நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், அமைச்சின் உயர் அதிகாரிகளும் கடதாசி ஆலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.  

கல்குடா தினகரன் நிருபர்  Add new comment

Or log in with...