இலங்கை பாதுகாப்பு படை உபகரண கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து 50 மில். டொலர்

இலங்கை பாதுகாப்பு படை உபகரண கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து 50 மில். டொலர்-Indian National Security Advisor Ajit Doval Met President

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இருநாட்டு இராணுவத்தினருக்குமிடையே பலமான ஒத்துழைப்புகள், சமுத்திர பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கிடையிலான சமுத்திர வலயம் தொடர்பான விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர், ஏனைய பிராந்திய நாடுகளையும் கண்காணிப்பாளர்களாக இந்த செயற்பாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இரகசிய தகவல்களை ஒன்றுதிரட்டும் தொழிநுட்பத்திற்கு இலங்கைக்கு உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது.

அத்துடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பூகோள ஒருங்கிணைப்பு மையத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...