உண்ணாப்பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை; நோயாளர்கள் பாதிப்பு | தினகரன்


உண்ணாப்பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை; நோயாளர்கள் பாதிப்பு

உண்ணாப்பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை; நோயாளர்கள் பாதிப்பு-No Doctors at Unnapilavu Hospital-Patience Affected

உரியவர்களுக்கு அழுத்தம் வழங்குவேன் - வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன்

முல்லைத்தீவு, உண்ணாப்பிலவு பிரதேச வைத்தியசாலையில் இன்றையநாள் (18) வைத்தியர் இன்மையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வைத்திய சாலையில் கடந்த சில மாதங்களாக நிரந்தர வைத்தியர் இன்மையினால், பதில் வைத்தியர்களே சேவையாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாள் குறித்த வைத்தியசாலைக்கு பதில் வைத்தியரும் வருகை தராதமையினால், வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் மருத்துவ சேவைகளை பெறமுடியாமல் திரும்பிச் சென்றனர்.

உண்ணாப்பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை; நோயாளர்கள் பாதிப்பு-No Doctors at Unnapilavu Hospital-Patience Affected

இவ்விடயத்தினை அறிந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள். நோயாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைப் பார்வையிட்டதுடன், நாளை மறுதினம் (20) இடம்பெறவிருக்கும் கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இது தொடர்பில் பேசுவதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த மருத்துவமனைக்கு தற்போது ஒரு நிரந்தர வைத்தியர் இல்லாத நிலையில், பதில் மருத்துவர்களே சேவையாற்றிவருகின்றனர். இன்று குறித்த பதில் மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வருகை தராதமையினால் நோயாளர்கள் மருத்துவசேவையினைப் பெறமுடியாமல்திரும்பிச் செல்கின்றனர்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்பதனை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு சரியான முறையில் மருத்துவமனை இயங்காது விட்டால், மருத்துவமனையை இழுத்து மூடிவிட்டு, இயங்குகின்ற மருத்துவமனைகளையாவது சரியான முறையில் இயக்கவேண்டும்.

உண்ணாப்பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை; நோயாளர்கள் பாதிப்பு-No Doctors at Unnapilavu Hospital-Patience Affected

இவ்வாறாக மருத்துவர் இல்லாதநிலையில், மருத்துவ மனைக்கு வருகை தருகின்ற நோயாளர்கள் எவ்வாறு மருத்துவசேவைகளை பெறமுடியும்.

இதற்குரிய அதிகாரிகள் இது தொடர்பில் சரியானமுறையில் செயற்பட்டிருந்தால், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இது தொடர்பில் கடந்த காலங்களில் பலதடவைகள், அழுத்தங்களை வழங்கியிருக்கின்றேன்.

அந்த வகையில் நாளை மறுதினம் இடம்பெற இருக்கின்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இது தொடர்பில் உரியவர்களுக்கு அழுத்தங்களை வழங்குவேன் என்றார்.

(விஜயரத்தினம் சரவணன்)


Add new comment

Or log in with...