சுகாதார தொண்டர் நியமனம் தொடர்பில் தீர்வு கிட்டவில்லை

சுகாதார தொண்டர் நியமனம் தொடர்பில் தீர்வு கிட்டவில்லை-Health Volunteer Appointment-Northern Province

நேர்முகப் பரீட்சை வரை வந்து தவறான முடிவால் நியமனம் நிறுத்தம்

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நான்காவது ஆளுநருடன் உரையாடுகின்றோம் இருப்பினும் தீர்வு மட்டும் கிட்டவில்லை என பாதிக்கப்பட்ட தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக தொண்டராகவிருந்த நிலையில் நீண்ட போராட்டங்கள் சந்திப்புக்களின் பின்னர் மெல்ல நகர்ந்த எமது நியமனம். ஒருவாறு நேர்முகப் பரீட்சை வரையில் வந்தது. இவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வின்போதே சரியான திட்டமிடல் மேற்கொண்டிருப்பின் எமக்கான நியமனம் அன்றே கிடைத்திருக்கும். சிலரின் தவறான முடிவுகளால் பலர் பாதிக்கப்பட்டு புதிய முகங்கள் உட்புகுத்தியமையினால் நாமே அதனை நிறுத்துமாறு கோர வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டோம்.

இதன் பின்பு மீண்டும் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இதன்போதும் பலர் பாதிக்கப்பட்டோம். அதே போன்று சில புது முகங்களும் உள்வாங்கப்பட்ட, நியமன எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் முதல் நேர்முகத் தேர்வில் பெயரும் இரண்டாம் நேர்முகத் தேர்வின் பின்னர் வழங்கிய நியமனக் கடிதமும் கையில் உள்ளபோதும் பணி மட்டும் வழங்கப்படவில்லை. அதேபோன்று இரண்டாவது பட்டியலிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இது தொடர்பில் புதிய ஆளுநரை இரு தடவைகள் சந்தித்தோம் இருப்பினும் இதுவரை தீர்வு கிட்டவில்லை.

இதேநேரம் சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம் நியமன ஊழியர்களை சரியாக இனம்கண்டு உறுதி செய்யுமாறும் அதற்காக தினவரவின் மூலம் உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகின்றது. அவ்வாறானால் இனியும் எவ்வளவு காலம் கடத்தப்படும் என அச்சமாகவுள்ளது.

இவற்றின் காரணமாக எமக்கான நியமனம் வழங்கப்படுமா இல்லையா என்ற அச்சம் காணப்படுகின்றது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Add new comment

Or log in with...