யானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி | தினகரன்


யானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி

யானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள் 386யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 118மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். 

வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொகை மதிப்பீட்டு அறிக்கையினூடாக அதிகமான யானைகள் மனிதர்களின் துப்பாக்கிச்சூட்டினாலும் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் கட்டப்பட்ட கட்டுத்துவக்கினாலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வாய் வெடி , மின்சாரப் பாய்ச்சல் மற்றும் புகையிரதங்களுடன் மோதியதனாலும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளன. சில மனிதர்கள் யானைகளுக்கு நஞ்சு வைத்தும் கொலை செய்துள்ளதாகவும் மதிப்பீட்டு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.   அத்துடன் அனுராதபுரம் வனஜீவராசிகள் வலயத்தினுள் மாத்திரம் 56யானைகள் கடந்த ஆண்டில் மனிதர்களின் செயற்பாட்டினால் உயிரிழந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் 28மனித உயிர்களும் பலியாகியுள்ளளன. 

காடுகளை அழித்து வருவதனால் யானை மனிதர்களுக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்து வருவதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .இம்மோதலை தடுக்குமுகமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதும் அவை இடைநடுவில் கைவிடப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டப்படுகின்றனர். 

இப்பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வுகாணும் நோக்கில் தற்போதய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...