அகலக்கால் பதிக்க தயாராகி வருகிறதா தமிழ்க் கூட்டமைப்பு? | தினகரன்

அகலக்கால் பதிக்க தயாராகி வருகிறதா தமிழ்க் கூட்டமைப்பு?

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு சிறுபான்மை இன அரசியல் கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டை நோக்கிய நகர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாரம்பரிய பெரும்பான்மை இனக் கட்சிகள் சிதைவடைந்து வருகின்றன. குறிப்பாக ஸ்ரீ.ல.சு.கட்சி அடையாளம் தெரியாமல் ஆகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஐ.தே.கவுக்குள் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. அக்கட்சி பிளவுறும் நிலை தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

அநேகமாக எல்லா சிறுபான்மைக் கட்சிகளும் ஐ.தே.கவை அண்டிய செயற்பாடுகளையே அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சி நிறுத்திய வேட்பாளருக்கே ஆதரவு வழங்கின. ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரி ஆகி விட்டது. 

பெரும்பான்மை இனம் இப்போது வேறு ஒரு திசை நோக்கி தமது அரசியல் அணுகுமுறையைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. வரப்போகும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலும் இதே போக்கை காட்டவும் செய்யலாம. இதற்கேற்றால் போல சிறுபான்மைக் கட்சிகளும் புதிய வியூகம் வகுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. 

டொனமூர் 1931ஆம் ஆண்டு கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தம் பாரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இதன் பயனாக முதன் முதலாக நடத்தப்பட்டது பிரதேசவாரி தேர்தல் முறைமை. இதில் மக்கள் இனஅடிப்படையிலேயே வாக்களித்திருந்தனர். இது ஓரினம் பிறிதொரு இனத்தை ஆளும் நிலைமையை ஏற்படுத்தியது என்பர் வரலாற்றாய்வாளர்கள். 

இக்காலகட்டத்தில் அரசியல் ரீதியாக இடதுசாரிகளே மலையக மக்களைக் கவரக் கூடியவர்களாகக் காணப்பட்டனர். 1936இல் இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் மலையக மக்கள் சார்பில் போட்டியிட்ட கோ.நடேசய்யரும் (தலவாக்கொல்லை) எஸ். வைத்தியலிங்கமும் (ஹட்டன்) தெரிவாகினர். பதுனை, பலாங்கொடை, நுவரெலியா தொகுதிகளில் போட்டியிட்ட வீ.ஏ. சோமசுந்தரம், சி.வேலுப் பிள்ளை, எஸ். இராமையா போன்றவர்கள் தோல்வி அடைந்தனர். 

ஆனால் மலையக மக்களின் வாக்குப் பலத்தினால் இடது சாரித் தலைவர்களான என். எம். பெரேரா, ஆர் .எஸ். குணவர்த்தன ஆகிய இருவரும் பெருவெற்றி கண்டனர். ஆரம்ப காலந்தொட்டே சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தின் தலைமைகளுக்கு வாக்களிக்கவே பழக்கப்பட்டிருந்து.  

1948களுக்குப் பின்னரான காலங்களில் வடக்கு, கிடக்கில் அரசியல் செய்த தலைமைகளுக்கும் மலையகத்தை பிரதிநித்துவம் செய்தவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு மறைந்து போனது. மலையகத்தில் தொழிற் சங்கம் வளர்ச்சி அடைந்தது. இதேவேளை வாக்குரிமை விவகாரத்தில் தலையை நுழைக்கும் பட்சத்தில் அது பெரும்பான்மை மக்களுக்குப் பிடிக்காமல் போய் விடலாம் என்னும் அச்சத்தினால் சில வடக்கு, கிழக்குத் தலைமைகள் அடக்கி வாசிக்கத் தலைப்பட்டன என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

இவ்வாறு பூர்வீகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகள் மலையக மக்கள் பற்றிய சிந்தனைகளை வேறு கோணத்தில் கணிப்பிட்டிருந்தன. கூலிகள், அந்நியர்கள் என்று அடையாளப்படுத்தவும் செய்தார்கள். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தேவைகளுக்கும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் வேறுபாடு இருந்தது. இதுவே இவர்களுக்கச் சாதகமாகவும் அமைந்தது. 

ஒரு கட்டத்தில் வடக்கு கிழக்கு தலைமைகள் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வராலாயின. இதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமானது. இதில் சௌமியமூர்த்தி தொண்டமான் இணைந்து தலைமைப் பொறுப்பை ஏற்கலானார். ஆனால், இது சிறிது காலம்தான் நீடித்தது. இதனால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எதுவும் காண முடியாது என்று அவர் உணர்ந்து கொண்டார். இதன் விளைவாக தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகலானார். 

1988இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களின் அரசியல் செல்நெறியில் ஒரு திருப்பமாகத் திகழ்ந்தது. குடியுரிமை இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி வேட்பாளரான ஆர்.பிரேமதாச முன்வந்தார். அதற்காக அவர் சௌமியமூர்த்தி தொண்டமானிடம் ஓர் நிபந்தனையைப் போட்டார். அதன்படி முழு மலையக வாக்காளர்களும் ஐ.தே.கவுக்கே வாக்களிக்கலாயினர். இதுவே தொடர்ச்சியான பழக்கமாவும் ஆனது.  

தொண்டமான் சக்திமிக்க ஓர் அமைப்பாக இ.தொ. காவை கட்டி எழப்பினார். தொழிற்சங்கம் அரசியல் அடிப்படையில் தேசிய கட்சிகளின் அவதானத்தைப் பெறும் நிலைக்கு இ.தொ.கா வளர்ச்சி கண்டது. இதன் பின்னர் உருவாக்கம் பெற்ற மலையக மக்கள் முன்னணி பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறக் கூடிய அளவுக்கு வேகம் கண்டது. அதன் நிறுவன தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் மலையக அரசியலில் புதிய சிந்தனைகளை கொண்டவராக காணப்பட்டார். 

இதேவேளை இ.தொ.கா இணையில்லா சக்தியாக பரிணமித்தது. 2004இல் அக்கட்சி 8பாராமளுமன்றப் பிரதிநிதிகளைப் பெற்று அசத்தியது. எனினும் அது தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளத் தவறியிருந்தது. 2010பொதுத் தேர்தலில் 4உறுப்பினர்கள் மட்டுமே கிடைத்தனர். 

2015இல் அக்கட்சிக்கு சவாலாக தோற்றம் பெற்றது தமிழ் முற்போக்குக் கூட்டணி. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி இணைந்த அமைப்பே இது. மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த எடுப்பிலேயே சாதிக்க ஆரம்பித்தனர். 

2015பொதுத் தேர்தலில் அக்கூட்டணி 6பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்ல முடிந்தது. 

அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் மலையக கட்சிகளுக்குச் சவாலாகவே அமைந்தது. இரு பெரும் கட்சிகளும் இரு பெரும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் களம் இறங்கின. இதில் இ.தொ.கா தரப்பு வென்றது. த.மு.கூட்டணி தரப்பு தோல்வி கண்டது. இற்றை வரையிலான மலையக அரசியல் மேலோட்டமாக இந்த அளவிலேயே வரையறை பெறுகின்றது. 

ஆனால் தற்போது சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து புரிந்துணர்வு அரசியல் செய்யும் முனைப்புகள் தெரிவதுதான் புதிய செய்தி. வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பிரதேசங்களுக்கு வெளியிலும் தமது அரசியல் நகர்வினை மேற்கொள்ள ஆலோசிப்பதாகத் தெரியவருகின்றது. 

இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வடக்கு, கிழக்கில் 20உறுப்பினர்கள் வடக்குக் கிழக்குக்கு வெளியே 3உறுப்பினர்கள் என்று பெறக் கூடியதாக இருக்கும் என்கிறார். கொழும்பு, கம்பஹா, புத்தளம், பதுளை, நுவரெலியா போன்ற மாவட்டங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டிலில் இருப்பதாக தகவல்கள் உள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்முடிவு குறித்து மலையக கட்சிகளிடையெ முணுமுணுப்பு எழவே செய்கின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான வே.இராதாகிருஷ்ணன் இது ஆபத்தான யோசனையாகும் என்கிறார். 

த.தே.கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் தாராளமாக போட்டி இடட்டும். பிற பகுதிகளை எங்களுக்கு விட்டுக் கொடுப்பதே சரியானது என்பது அவர் பார்வை. அப்படி இல்லாமல் இரு தரப்புமே ஒரே இடத்தில் போட்டியிட்டால் தோற்றுப் போக நேரிடும். அது எமது இனத்துக்கே அழிவு என்று அச்சம் தெரிவிக்கின்றார் அவர்.  பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இருக்கும் சொற்ப வாக்குகளையும் சிதறடிக்கும் ஒரு முயற்சியாகவே அமையுமென எச்சரிக்கினறார். 

 பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் நாட்டின் எந்தவொரு மாவட்டத்திலும் போட்டியிட உரிமை கொடுண்டுள்ளது. ஆனால் சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்த வரை அதிரடியாக இப்படியொரு முடிவுக்கு வந்து விட முடியாது. 

ஏனெனில் ஒரு சிறுபான்மை இனக் கட்சி தமது வழமையான பகுதிகளுக்கு வெளியே போட்டியிடும் பட்சத்தில் அங்கு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் பிறிதொரு சிறபான்மை கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழவே செய்யும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவையும் எதிர்வரும் தேர்தலில் தமது அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்துகின்றன. தமிழ் முற்போக்கு கூட்டணியோடும் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் இடம்பெற வாய்ப்புண்டு. 

இந்த சிறுபான்மை இன கட்சிகள் தமது தற்போதைய அரசியல் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் அதிகரிக்கவும் தலைப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது பெரும்பான்மை இன கட்சி களோடு பேரம் பேச கை கொடுக்கும் என்பதே இக்கட்சிகளின் எதிர்பார்ப்பு. 

 வடக்கு கிழக்குக் கட்சிகள் மலையகத்தில் களமிறங்குவதை மனோ கணேசனோ பழனி திகாம்பரமோ முழுமையாக வரவேற்பார்களா என்பது கேள்விக்குறி. கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசன் மீண்டும் போட்டியிடும் சூழ்நிலையே காணப்படுகின்றது. இங்கு தமிழ்த் தேசியத் கூட்டமைப்பும் போட்டியிடும் பட்சத்தில் மனோ கணேசனின் வெற்றி பாதிக்கப்படவே செய்யும். ஏற்கனவே மலையகத்தில் டெலோ போன்ற அமைப்புகள் காலூன்ற முயன்றதைக் கண்டிருக்கின்றோம். 

 தொழிற்சங்கத்துக்கூடாக அரசியலில் ஈடுபடுவதே இதன் இலக்காக இருந்தது. இப்பிரதேசங்களில் மலையக வாக்குகளைத் தவிர வடக்குக் கிழக்கு வாக்குகளும் கணிசமாக இருப்பதாகவே அவதானிகள் பதிவிடுகின்றார்கள். வடக்குக் கிழக்கிற்கு வெளியே கிடைக்கும் வாக்குகள் தேசிய பட்டியலில் பியோசனப்படும் என்னும் கருத்தும் உள்வாங்கப்படுகின்றது. இதேநேரம் கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற மலையகப் பகுதிகளை இலக்கு வைத்து புதியகட்சி யொன்று தோற்றம் பெற இடமுள்ளதாக ஊடகம் ஒன்று எழுதியுள்ளது. 

இதனால் த.மு. கூட்டணி, இ.தொ.காவோடு வேறு சில சக்திகளும் மலையக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வலை விரிக்கும் படலமும் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக இ.தொ.கா இன்று இரண்டு பிரதிநிதித்துவங்களை மட்டுமே கொண்டுள்ளது.இதை அதிகரித்துக் கொள்ள தற்போதைய அரசியல் பின்புலமே அதற்குச் சரியான சந்தர்ப்பம். 

 இன்றைய அரசாங்கம் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு மட்டுமாவது நியாயமான தீர்வு ஒன்றினை அறிவிக்குமாயின் பாராளுமன்றத் தேர்தலில் அது அக்கட்சிக்கு சாதகமாக அமையலாம். தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு தற்போதிருக்கும் பிரதிநிதித்துவங்களைத் தக்கவைத்துக் கொண்டாலே போதுமென்னும் நிலைமை. 

கூட்டணி கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்பூசல் அக்கட்சியின் பலத்தைக் குறைக்குமா என்னும் ஐயமும் எழுந்துள்ளது. அமரர் சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் எதிர்வரும் பாராளுன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். 

இவர் போட்டியிட்டால் வே. இராதாகிருஷ்ணன் தமது இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியம்தானா என்ற கேள்வி எழாமல் இல்லை. 

எனவே தனது தந்தையின் பெயரை ஆதர்ஷமாகக் கொண்டு தனித்து தேர்தலில் இறங்க அனுஷா சந்திரசேகரன் முன்வருவாராயின் அது அக்கட்சிக்கான வாக்கு வங்கியைச் சிதறடிக்க மட்டுமே உதவும். இதனால் சந்திரசேகரன் அரும்பாடுபட்டு உருவாக்கிய மலையக மக்கள் முன்னணி ஆதரவாளர்களின் வாக்குகள் உதவாமலே போய் விடலாம். மலையக வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்தால் மட்டுமே தற்போதிருக்கும் 9பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும். இதற்காக மலையக அரசியல் கட்சிகள் நிதானமாக காய்நகர்த்த வேண்டியுள்ளது. 

கட்சிகள் பலவீனம் அடையும் போது பேரம் பேசலுக்கான பின்புலம் தளர்வடைவது தவிர்க்க முடியாதது ஆகி விடும். இது பெரும் பாதிப்பினை உண்டாக்கவே செய்யும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரந்து கால் வைக்கும் யோசனையை இதன் அடிப்படையிலேயே அணுக வேண்டியுள்ளது. சந்தர்ப்பவாத அரசியலுக்கு இது தருணமல்ல. ஆனால் சகல சிறுபான்மை கட்சிகளும் பொதுத் தேவையின் நிமித்தம் விட்டுக் கொடுக்கும் அரசியல் கலாசாரத்தை கையாள வேண்டும். இன்றைய நிலையில் போட்டி அரசியலை விட நெகிழ்வுத் தன்மை கொண்ட அரசியல் அணுகுமுறையே அவசியமென்தை மலையக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மைக் கட்சிகளும் உள்வாங்கிக் கொள்ளுமாயின் அது உபயோகமானதாக அமையும்.  

தியத்தலாவை
பாலசுப்பிரமணியம்...


Add new comment

Or log in with...