விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அங்கு பயணிகளுடன் கலந்துரையாடுவதைப் படத்தில் காணலாம.

- விமானப்பயணிகள் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகக்கூடாது.
- ஜனாதிபதி விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை

நாட்டிலிருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்கு வருகைத்தரும் அனைத்து விமானப் பயணிகளும் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென நேற்று (16) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை வலியுறுத்தினார்.

நாட்டிலிருந்து வெளியேறும் விமானப் பயணியொருவர் விமான நிலையத்திற்குள் நுழையும் சந்தர்ப்பத்திலிருந்து பயணிகள் நுழைவாயிலின் ஊடாக விமானத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் நாட்டிற்கு வருகைத்தரும் விமானப் பயணியொருவர் விமான நிலையத்திலிருந்து வெளிச்செல்லும் வரையிலான காலத்தை செலவிடும் இடங்களும் செயற்பாடுகளும் இதன்போது ஜனாதிபதியின் கண்காணிப்புக்கு உள்ளாகியது.

குடிவரவு குடியகல்வு சோதனை நடவடிக்கைகளுக்கு போதியளவிலான அதிகாரிகளை உட்படுத்தி பயணிகளுக்கு ஏற்படும் தாமதங்களை இயன்றளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

விமான நிலையத்திலிருந்து வெளிச்செல்லும் மற்றும் வருகைத்தரும் பயணிகளுடன் ஜனாதிபதி சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நாட்டிற்குள் வருகைத்தருவதற்கும் வெளிச்செல்வதற்கும் தனித்தனியே இருவேறு தொகுதிகளை நிர்மாணிப்பதன் ஊடாக வினைத்திறனான சேவைகளை மக்களுக்கு வழங்க முடியும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய பயணிகள் நுழைவாயிலின் நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

வாடகை வாகன வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக தனியான பிரிவொன்றினை நிர்மாணிக்குமாறு விமான நிலைய தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறிக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி, விமான நிலையத்தின் வினைத்திறனான சேவை வழங்கல் தொடர்பில் விமான நிலைய தலைவருக்கும் ஆளணியினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.


Add new comment

Or log in with...