சங்க இலக்கியங்கள் நவிலும் தை நீராடும் இளம் பெண்கள்

"தான் உற்ற காதல் நோய்க்கு அவளே மருந்து”

அதிகாலையில் இளம் பெண்கள் துயிலெழுவது, அனைரும் இணைந்து குளிர்ந்த நீர்நிலைகளுக்குச் செல்வது, நீராடி நல்ல கணவனை தமக்கு அருளுமாறு நோன்பிருப்பது ஆகிய வழக்கங்கள் சங்ககாலம் முதற்கொண்டே தமிழ் மக்களிடையே இடம்பெற்று வந்திருக்கின்றன.

ஆனால் மார்கழி மாதத்திற்கு பதிலாக தைத் திங்களில் இந்த நோன்பினை இளம் பெண்கள் மேற்கொண்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது.

  தைத் திங்களில் நீர்நிலைகள்

  குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடப்பது

ஆவணி மாதம் முதல் பெய்த மழையால் ஆறு குளங்கள் எல்லாம் நிரம்பி அதன் பிறகு பெய்த பனியாலும் வாடைக் காற்றாலும் தைத் திங்களில் நீர் நிலைகளெல்லாம் குளிர்ந்து காணப்படும்.

இந்தச் செய்தி புறநானூறு, குறுந்தொகை முதலிய சங்க இலக்கியங்களில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

தை இத் திங்கள் தண்கயம் போலக்கொளக் கொளக் குறையா கூழுடை வியனகர் (புறம்-70)  தைத் திங்களின் தண்மையான குளம்போல அள்ள அள்ளக் குறையாத அன்னம் நிறைந்த வீடுகளை உடைய பெரிய நகரங்களை உடையதாம் கிள்ளி வளவனின் நாடு!

பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்தை இத் திங்கள் தண்ணிய தரினும்வெய்ய உவர்க்கும் என்றனிற் (குறுந் - 196)

"முன்பு  வேம்பின் பசுங்காயைத் தந்தாலும் பூந்தேனின் இனிய கட்டி இது என்று போற்றிய நீங்கள் இப்போது தை மாதத்தின் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையிலுள்ள இனிய சுனை நீரைக் கொடுத்தாலும் வெம்மையாக இருக்கிறது. உவர்ப்பாக இருக்கிறது என்கின்றீர்! உம்முடைய அன்பின் மாறுபாடே இதற்குக் காரணம்' என்று குறைபட்டுக் கொள்கிறாள் ஒருத்தி!

தை நீராடும் இளம் பெண்கள்:

நற்றிணைப் பாடல் ஒன்று நல்ல கணவனைப் பெறவேண்டி தைத் திங்களில் குளிர்ந்த குளத்து நீரில் நீராடும் ஓர் இளம் பெண்ணை நமக்குக் காட்டுகிறது.

இழையணி ஆயமொடு தகுநாண் தடைதை இத் திங்கள் தண்கயம் படியும்பெருந்தோட் குறுமகள் அல்லதுமருந்து பிறிது இல்லை யான்உற்ற நோய்க்கே (நற்.80)

நாணம் மிக்க இளம் பெண்ணான அவள் தன் தோழிகளோடு கூடிச் சென்று தைத் திங்களில் குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடக்கும் குளத்தில் நீராடி நோன்பிருக்கிறாள்.

"தான் உற்ற காதல் நோய்க்கு அவளே மருந்து' எனக் கூறுகிறான் இளைஞன் ஒருவன். நோன்பு என்பது தான் கொண்ட நோக்கத்திற்காக தனக்கு நேரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மன உறுதியாகும்.

 நாணம் தடுத்ததால் அல்லவோ காதலனோடு புறப்பட்டுச் சென்றுவிடாமல் அவனைக் கணவனாக அடைய வேண்டி அவள் நோன்பிருக்கிறாள்.

மகளிர் பலர் கூடி நீராடும் தைத் திங்களின் குளுமையான குளம் போலக் காட்சியளிக்கிறதாம் அவன் மார்பு!

பரத்தையர் பலர் தழுவி மகிழ்ந்திட  அவர்களுடன் பழகிவிட்டு இல்லம் திரும்பும் தலைவனை நோக்கி இவ்வாறு இடித்துரைக்கிறாள் தோழி!

 "நீ அப்படிப்பட்ட ஒழுக்கமுடையவன் என்று யாரேனும் சொல்லக் கேட்டாலே வெகுளும் என் தலைவி இப்போது உன்னைக் காண நேர்ந்தால் என்னாகுவாளோ என்று சொல்லி வருந்துகிறாள்.

செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்கண்ணிற் காணின் என்னாகுவள் கொல்?நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்தைஇத் தண்கயம் போலப்பலர் படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே (ஐங்.84)

இத்தகைய மகளிர் ஆடல், "அம்பா ஆடல்' எனப் பரிபாடலில் குறிப்பிடப்படுகிறது. திருமணம் ஆகாத இளம் பெண்கள் தம் தாயார் அருகிருக்க நீராடுவதால், "அம்பா ஆடல்' என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர் பலர் விளக்கம் கூறுவர். "அம்பா' என்பதற்கு "அன்னை' என்று பொருள் சொல்லப்பட்டுள்ளது.

 சில்லென்று பனி பெய்கின்ற தை மாதத்து வைகறைப் பொழுதில் இளம் பெண்கள் வைகை ஆற்றில் நீராடி, அதன் கரையோர மணற் பரப்பில் அந்தணர்களால் எழுப்பப்பட்ட வேள்வித் தீயின் வெப்பத்தில் தம் ஈர ஆடைகளை உலர்த்திக் கொள்ளும் காட்சியைப் பரிபாடலில் காண்கிறோம்.

இளம் பெண்கள் பூமியின் வெம்மை தீர்ந்து, மழை வளத்தால் குளிர்ச்சியடைவதற்காக இவ்வாறு நீராடினார்களாம்!

"வெம்பாதாக வியல்நில வரைப்பெனஅம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்பனிப் புலர்பு ஆடிப் பருமண லருவியின்ஊதை யூர்தர உறைசிறை வேதியர்நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின்தையல் மகளிர் ஈரணி புலர்த்தர' (பரி.11-80-86)  உள்ளத்தில் உள்ள நோக்கம் நிறைவேறும் பொருட்டு துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு சில ஒழுக்கம், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது நோன்பு. என்றாலும் சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டவர்கள் என்பதால் இந்த தை நீராடல் நோன்பைக் கடைப்பிடித்தனர் என அறிய முடிகிறது.

 அறிவியல் நோக்கிலும் மார்கழி - தை மாதங்களில் "ஓசோன்' என்ற உயிர் வாழ்க்கைக்கேற்ற உன்னதமான வாயு குளிர்ந்த நீர் நிலைகளின் மேற்பரப்பில் பரவி இருக்கும் என்ற அறிவியல் உண்மை அறிந்தே அவ்வாறு செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

இதனால் இயற்கையாக நம் உடம்பில் ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆண்டு முழுவதும் நீடித்திருப்பதற்கு வழி கண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறியவேண்டியதாகும்.

 இரா.மலர்விழி


Add new comment

Or log in with...