ராஜீவ் கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வந்துள்ள ரவிச்சந்திரன், ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு பிணை வழங்கக் கோரி மதுரை உச்சநீதிமன்ற கிளையில் அவருடைய தாயார் ராஜேஸ்வரி மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரனுக்கு எதிர்வரும் (25)வரை பிணை வழங்க உத்தரவிட்டனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் வெளியே வந்தார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தாயாருடன் தங்கியிருந்த ரவிச்சந்திரன், அருப்புக் கோட்டையில் உள்ள புண்ணியஸ்தலமான சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடவும், ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கவும் வெளியே செல்ல வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆதார் அட்டை எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டார். இதனிடையே அதிகாரிகள், ஆதார் அட்டை வழங்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

உடனடியாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி உத்தரவு பெற்றார். அதன் பேரில் ரவிச்சந்திரனுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் சென்று ரவிச்சந்திரன் வழிபட்டார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...