ஐ.தே.க. தலைமைத்துவம்; தீர்மானமின்றி நிறைவடைந்தது கூட்டம் | தினகரன்


ஐ.தே.க. தலைமைத்துவம்; தீர்மானமின்றி நிறைவடைந்தது கூட்டம்

ஐ.தே.க. தலைமைத்துவம்; தீர்மானமின்றி நிறைவடைந்தது கூட்டம்-UNP Leader Appointing Meeting-No Decision

இறுதித் தீர்மானம் திங்கட்கிழமை? வெள்ளிக்கிழமை?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பது தொடர்பில் இடம்பெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்துள்ளது.

நேற்று (16) மாலை ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அக்கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைமை தொடர்பில் இடம்பெற்ற பல்வேறு கலந்துரையாடல்கள் தோல்வியுற்ற நிலையில், கடந்த ஜனவரி 09ஆம் திகதி இடம்பெற்ற ஐ.தே.க. பாராளுமன்ற குழுக் கூட்டத்தில், நேற்றைய தினம் (16) இறுதித் தீர்மானம் எடுப்பதாக இருந்த் நிலையில், குறித்த கூட்டம் எவ்வித முடிவுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இறுதி வரை கலந்து கொண்ட உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்ட வாக்கெடுப்பில் 52 பேர் கலந்து கொண்டதாகவும், அதில் 90 வீதமானோர் சஜித் பிரேமதாஸவை தலைவராக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நவீன் திஸாநாயக்க, குறித்த விடயம் தொடர்பில், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய ஆகியோர் கூடி எதிர்வரும் திங்கட்கிழமை (20) இறுதித் தீர்மானமொன்றுக்கு வருவதோடு, 72 மணித்தியாலங்களுக்குள் கட்சி ஆதரவாளர்களுக்கு சிறந்த முடிவொன்றை அறிவிப்பார்கள் என்றும தெரிவித்தார்.

ஆயினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், இறுதித் தீர்மானம் எதிர்வரும் வாரம் வெள்ளிக்கிழமை (24) மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். கூட்டத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு தொடர்பில் கேட்டபொது, கூட்டத்திற்கு அமைவாக எவ்வித வாக்கெடுப்பும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த அவர், ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்ட வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...