உக்ரைன் விமானம் மீது இரு ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் பயணிகள் விமானத்தை இரு ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக புதிய வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.

30 வினாடி இடைவெளியில் இரண்டு ஏவுகணைகள் தாக்கியது பாதுகாப்பு கெமரா கட்சி ஒன்றின் மூலம் உறுதியாவதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை உறுதி செய்துள்ளது. இதனால் விமானம் உடன் கீழே வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தரையில் விழுந்து வெடிப்பதற்கு முன்னர் இந்த விமானம் தீப்பற்றியபடி சில நிமிடங்கள் பறப்பது அந்த வீடியோவில் தெரிகிறது.

முதல் ஏவுகணை தாக்குதலால் விமானத்தின் அலைவாங்கி செயலிழந்த நிலையில் இரண்டாவது ஏவுகணை தாக்கி இருப்பதாக அந்தப் பத்திரை செய்தியில் கூறப்பட்டுள்ளது. விமானம் விழுந்து ஒருசில தினங்களுக்குப் பின்னரே அது தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்டதை ஈரான் ஒப்புக்கொண்டது.

இந்த விமானத்தை க்ரூஸ் ஏவுகணை என்று தவறுதலாக எண்ணி ஏவுகணை இயக்குபவர் ஒருவர் அதனை தாக்கி இருப்பதாக தெரியவருகிறது என்று ஈரான் புரட்சிக்காவல் படையின் விமானப்படை தளபதி பிரகேடியர் ஜெனரல் ஆமிர் அலி ஹாஜிசதாஹ் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலரை கைது செய்திருப்பதாக ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

மறுபுறம் உக்ரைன் பயணிகள் விமானத்தை ஏவுகணைகள் தாக்கும் வீடியோ வெளியிட்ட நபரை ஈரான் இராணுவம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Add new comment

Or log in with...