அவுஸ்திரேலியாவில் 5,000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை

தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடியினரின் வாழ்வாதாரங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாக 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரட்சி மற்றும் கடும் காட்டுத்தீயினால் அதீத உஷ்ணங்களைத் தாங்க முடியாமல் ஒட்டகங்கள் பூர்வக்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு வர ஆரம்பித்துள்ளன.

இவைகளின் வருகையால் நீராதாரம், ஏற்கனவே பற்றாக்குறையில் உள்ள உணவுகள் ஆகியவற்றுக்கு ஆபத்து நேர்ந்ததால் ஹெலிகொப்டர் மூலம் சுமார் 5000 ஒட்டகங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அனங்கு யாங்குனியாஜராவில் சுமார் 2,300 பூர்வக்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 5,000 ஒட்டகங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை ஞாயிறன்று முடிந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரட்சி காரணமாக 10,000 ஓட்டங்களை கொல்லும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த ஒட்டகங்களைக் கொல்லும் உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் சுமார் 10 இலட்சம் ஒட்டகங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...