தரம்-1: மாணவர்களை சேர்க்கும் தேசிய தினம்

மலர்ந்திருக்கும் 2020ம் ஆண்டு புத்தாண்டிலே தரம் 1க்கான சிறுவர்களின் பாடசாலை பிரவேசம் இன்று (2020.-01.-16) நாடெங்கிலும் உள்ள சகல அரசாங்க பாடசாலைகளிலும் நடைபெறவிருப்பது மகிழச்சிக்குரியது. இன்றைய தினம் பெற்றார்களுக்கு ஓர் இனிய நாளாக இருக்கிறது. தரம் 1க்கான கல்வியை ஆரம்பிக்கவிருக்கும் எமது சிறுவர்கள் இன்று பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்றனர். தொடர்ந்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரால் இந்த சிறுவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக சகல பாடசாலைகளிலும் விதவிதமான வைபவங்கள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று அரங்கேற்றப்படுகின்றன. ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் சகல பாடசாலைகளிலும் மேற்படி நிகழ்வுகள் நடைபெறுவது விசேஷமானதாகும்.

இவ்வைபவங்களின் போது அதிபர், ஆசிரியர்கள், பெற்றார்கள் மற்றும் பிரமுகர்கள், விசேட அதிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

பாடசாலைக்கு சிறுவர்களை சேர்ப்பது தொடர்பாக இன்று காலையிலேயே வீடுவாசல்களில் எல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வுகளை காணக்கூடியதாக உள்ளது. வீட்டில் உள்ளவர்கள், பெற்றார்கள் யாவரும் பிள்ளைகளை கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பி வைக்கின்றனர். பெற்றார்கள், பெரியவர்கள், கல்விமான்கள், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் உள்ளிட்ட பலரிடம் இந்த சிறுவர்கள் நல் ஆசிகளை பெற்றுக்கொள்கிறார்கள். தனது பிள்ளை சிறந்த கல்வியை கற்று எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜையாக வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். அசிரியர்களும் நல்மனதுடன் அவர்களை வரவேற்று ஏற்றுக்கொள்கின்றனர்.

பெற்றார்களும் ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கதைக்கின்றனர். பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். பெற்றார்கள், பிள்ளைகள், ஆசிரியர்கள் யாவரும் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். ஓரிரு வருடங்கள் பாலர் பாடசாலைகளில் பயிற்சிகள் பெற்றதன் பின்னர் முதன் முதலாக பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கவிருக்கும் இந்தச் சிறுவர்கள் புது அனுபவங்களை பெற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.

தமது பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். இனி எமது கடமை முடிந்துவிட்டது. என்ற முடிவுக்கு பெற்றார்கள் ஒருபோதும் வந்துவிடக் கூடாது. தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஆசிரியர்களுடன் சேர்ந்து கூடிய அக்கறை செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகிவிடுகிறது. ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். தமது பிள்ளைகள் படிக்கிறார்கள் என்ற நிலையில் பெற்றார்கள் ஒதுங்கிவிடக்கூடாது பிள்ளைகளின் கல்வி விஷயமாக கண்ணாயிருந்து செயல்பட வேண்டும்.

பிள்ளைகள் பாடசாலை விட்டு வந்ததும் அவர்களுடன் மனம் விட்டு அன்பாக கதைக்க வேண்டும். அவர்கள் பாடசலையில் செய்த பயிற்சிகளை பார்த்து அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்களது சிறு சிறு பிழைகளுக்கெல்லாம் கடுமையா நடந்து கொள்ளக் கூடாது. அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் ஒருபோதும் செயல்படக் கூடாது. அவர்கள் மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக பெற்றார்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இன்று அதிகமான பெற்றார்கள் தங்களது பிள்ளைகளிடமிருந்து விரைவான கல்வி வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். இது தவறானது. பிள்ளைகள் அவர்களது வயது மனநிலைக்கேற்ப மெல்ல மெல்ல கல்வியை படித்துவர அவகாசம் கொடுக்க வேண்டும். பெற்றார்கள் பிள்ளைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு கல்வியை சுமையாய விளங்கிக்கொள்ள இடம்வைக்கக் கூடாது. இதன்மூலம் அவர்களது சிந்தனை, மன உணர்வுகள் என்பவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்பதை பெற்றார்கள் உணர வேண்டும். பிள்ளைகள் படிக்கும் நேரம் போக ஏனைய நேரங்களில் சுதந்திரமாக செயல்பட இடம் கொடுக்க வேண்டும். போதிய அளவு ஓய்வு வழங்க வேண்டும். பிள்ளைகள் படிப்பதற்கான ஏற்ற வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம்விட்டு இரக்கமாகக் கதைக்க வேண்டும். இதனால் அவர்களது மனம் விரிவடையலாம் என்பதை பெற்றார்கள் உணர வேண்டும்.

மேலும் இன்று பல பெற்றார்கள் பிள்ளைகள் பாடசாலை முடிந்து வந்ததும் பின்னேர வகுப்பு, மாலை நேர வகுப்பு விடுமுறை தின வகுப்பு என பல வகுப்புகளை ஒழுங்கு செய்து அங்குமிங்குமாக படிக்க அனுப்புகின்றனர். இவ்வாறான செயல்பாடுகளால் பிள்ளைகளுக்கு கல்வியில் வெறுப்பு உண்டாகலாம். பிள்ளைகளின் வயது மனநிலை என்பவற்றை புரிந்து அவர்களை வழிநடத்த வேண்டும். கல்வியை ஊட்டுவதில் வற்புறுத்தலோ, கடுமையான போக்குகளோ இருக்கக் கூடாது. அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணமாக இருக்கக் கூடாது. பிள்ளைகள் தவறுகள் செய்தால் அதனை சுட்டிக்காட்டி அன்பு வார்த்தைகள் கூறி அவர்களை திருத்த வேண்டும். இதனால் பிள்ளைகள் தாங்கள் பிழைகள் செய்தால் பெற்றார்கள் தண்டிக்கிறார்கள் என்பதையும் நற்காரியங்கள் செய்தால் அவர்கள் எங்களை பாராட்டுகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்வார்கள்.

2020 புதுவருடத்தில் தரம் 1க்கு புதிதாக சேர்ந்திருக்கும் சிறுவர்களுக்கு உரிய கல்வியை வழங்கி அவர்களை நற்பிரஜைகளாக மாற்றுவதற்கு ஆசிரியர்கள் திடசங்கற்பம் பூண வேண்டும். அதுவே அவர்களது சிறந்த கடமை.

தரம் 1ல் புதிதாக கல்வியை ஆரம்பிக்கவிருக்கும் அனைத்து சிறுவர்களினதும் எதிர்காலம் சிறக்க நாம் அனைவரும் வாழ்த்துவோம்.

எம்.ஏ. அத்தாஸ்
மாத்தறை


Add new comment

Or log in with...