ரூ1000 தோட். தொழிலாளருக்கு மார்ச் முதல் சம்பள அதிகரிப்பு | தினகரன்


ரூ1000 தோட். தொழிலாளருக்கு மார்ச் முதல் சம்பள அதிகரிப்பு

தோட்ட முதலாளிமாருக்கு சலுகைப் பொதி; உரமானியம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இதற்கிணங்க 730 ரூபாவாகவுள்ள தோட்டத் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர்:

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆயிரம் ரூபா சம்பளத்தை சாத்தியப்படுத்தும் செயற் பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. 2020ல் பொருளாதாரத்தை சிறப்பாகக் கட்டியெழுப்ப தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம். தோட்டத் தொழிலாளர்களான 1,50,000 பேரின் உழைப்புக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமாகும்.

அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், ‘ஜனவசம’ மற்றும் அரசாங்கத்தின் கீழுள்ள தோட்ட நிறுவனங்கள் இணைந்து இப்பிரதிபலனை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும். தேயிலை விலை குறைந்துள்ள நிலையில் ஏல விற்பனை மூலமே தேயிலை விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தேயிலையை உற்பத்திசெய்தாலும் அவர்களால் விலையைத் தீர்மானிக்க முடியாது. இந்த நிலையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு முதலாளிமார் எவ்வாறு இணக்கம் தெரிவிக்க முடியும்? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பத்திரண:

நாம் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை இலக்காகக் கொண்ட சலுகைப் பொதியை வழங்கியுள்ளோம். சகல நிறுவனங்களும் பயனடையும் வகையில் வரிச்சலுகை, பொருளாதார சேவைக் கட்டணக்குறைப்பு, உர மானியம் உள்ளிட்ட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களின் செலவினங்கள் குறைவடைவது உறுதி. சலுகைப் பொதியுடன் மேலும் பல செயற்திட்டங்களை நாம் இவ்வருடத்தில் நடைமுறைப்படுத்துவோம். அவர்களது பொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்த இது பெரிதும் உதவும்.

எவ்வாறெனினும் அவர்கள் தோட்டங்களில் பெற்றுக் கொள்ளும் வருமானத்தில் குறைவு ஏற்படவில்லை. அவர்களது உள்ளக செலவினங்களே அவர்கள் நட்டம் என கூறுவதற்குக் காரணமாகின்றது. இந்த நிலையில் நாம்அவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்மானம் எடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவத்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...