ரூ 1,000 சம்பளப்பிரச்சினைக்கு இம்மாதத்துக்குள் தீர்வு நிச்சயம்

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கமைய தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள பிரச்சினைக்கு நிச்சயம் இந்த தைப்பொங்கல் காலப்பகுதியில் தீர்வு காணப்படும். இந்த பொங்கல் தினத்துடன் ஆயிரம் ரூபா பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்று நான் தெரிவித்திருந்தேன். அந்தக் கூற்றில் எவ்விதமான மாற்றமும் இல்லை என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று (15) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

நிச்சயமாக இந்த தை மாதத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் அதற்கான வேலைத் திட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் நாம் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். அமைச்சரவையிலும் இதுதொடர்பாக பேசப்பட்டு தீர்க்கமான ஒரு முடிவு எட்டப்படவுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதற்குப் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். இந்த விடயத்திற்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என்பதில் இருவரும் மிகவும் அக்கறையாக உள்ளனர். ஆகவே இனியும் இவ்விடயத்தில் எவரும் பொய்யான உறுதிமொழிகளை கூற நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த தை மாதத்தில் நிச்சயம் இதற்கு தீர்வு காணப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார். 

நாம் உறுதிமொழிகளை வழங்கி விட்டு ஓடி மறைந்து கொள்பவர்கள் அல்ல அல்லது வேறு விடயங்களை கூறி, கூறிய விடயங்களை தட்டிக்கழித்து செல்பவர்களும் அல்ல. நிச்சயமாக ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை மட்டுமல்ல தோட்டத் தொழிலாளர்களது ஏனைய அடிப்படை பிரச்சனைகளுக்கும் நாங்கள் தீர்வினை விரைவாக காண்போம் என்றும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...