உலகத் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள்

உலகின் முதன்மை சக்தி முதல் கதிரவன். உலக மக்களுக்கு உணவூட்டும் விவசாயத்துக்கு துணைபுரிபவன் ஆதவன். அவ்வாறான உலகின் முதன்மைச் சக்திக்கு நன்றிக் கடன் செலுத்துவது தமிழர்களின் தொன்மைமிகு மரபுகளில் ஒன்றாகும்.

மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் இன்று கொண்டாடி வருகின்றது.

தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! அது தமிழரின் பண்பாட்டு விழா! தமிழரின் தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடும் நாள்!

பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. நாம் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன.

தமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை உலகத் தமிழர்களின் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு உண்ணும் பொங்கல் என்று பொருள் அல்ல. 'பொங்கிப் பெருகி வருவது' என்று பொருள். தமிழர்கள் வாழுமிடமெல்லாம் பொங்கல் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட பட்டாசு வெடிகள் கேட்கத் தொடங்கி விடும். மக்கள் தத்தமது வீட்டில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர்.

இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை வாங்கி பொங்கும் பழக்கம் உள்ளது. மேற்கு நாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதி படைத்தவர்கள் மாத்திரமன்றி வறிய மக்களும் சிரமப்பட்டு புத்தாடை வாங்கி அணிந்து குதூகலிப்பர்.

தைப்பொங்கலன்று அதிகாலை எழுந்து தலையில் நீர் ஊற்றி நீராடுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பொங்கல் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சள் செடியைக் காப்பாக அணிவர். ெபாங்கல் பானைக்கு பூமாலை சூட்டும் வழக்கமும் உண்டு. புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

முற்றத்திற் கோலமிட்டு, தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து, விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

இந்துத் தமிழர்கள் மத்தியில் பசுவின் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உள்ளது. பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன் தனது மனைவி மக்களுடன் கூடி நின்று 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!' என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடும் வழக்கம் இலங்கையின் வடபகுதியிலும் தென்னிந்தியாவிலும் நிலவி வருகிறது.

விவசாயி தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது என்பர்.

தமிழர்கள் வாழும் பட்டிதொட்டியெல்லாம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்தப் பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு 'புதியீடு' என்று பெயர் இருந்தது. அதாவது ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில் அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல்.4வதுநாள் காணும் பொங்கல்.

நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்வாய்ப்பாக இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து குளித்து வீட்டில் உள்ள தேவையற்ற பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். 'தீயவை அழிந்து நல்லவை வரட்டும், பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

2ஆவது நாளான பொங்கல் விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி புதுப் பாலில் புது அரிசியிட்டு வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். பால் நன்கு பொங்கி வரும் போது கதிரவன் உதயமாகும் நேரமாக இருக்க வேண்டும் என்பது மரபு.

பொங்கல் பொங்குவது என்பதே வெப்பத்தின் மிகுதியால்தான். 'கதிரவனே, உன்னுடைய வெப்பம் மிகுந்ததனால் பானையில் உள்ள இனிப்புப் பொங்கல் பொங்கி வழிகிறது. அதைப் போலவே எங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி பொங்க வேண்டும்' என்பதாகத்தான் 'பொங்கலோ பொங்கல்' என்ற குரலும் குரவைச் சத்தமும் ஓங்கி ஒலிக்கின்றன.

நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும் நலமும் நிலவும் என்பது ஐதீகம்.

3வது நாள் விழா மாட்டுப் பொங்கல் ஆகும். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகளின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து மாட்டுப் பொங்கல் தினத்தின் போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும்.

ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்தியாவில் மாட்டுப் பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

நான்காவது நாள் காணும் பொங்கலாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார் உறவினர் நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும் பொழுதுபோக்கும் இடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். சில மாவட்டங்களில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின் போதுதான் கிராக்கி. இன்று முழுவதும் கரும்பு உண்பவர்களும் இருக்கிறார்கள். பொங்கல் என்பது தமிழர்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து விட்ட மகிழ்ச்சிப் பண்டிகையாகும்.

தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். அதேசமயம் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவலங்கள் ஒழிந்து எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழ சூரியப்பெருமானை இறைஞ்சுவோமாக!

 


Add new comment

Or log in with...