ஈராக்கில் அமெரிக்க தளம் மீது மீண்டும் ரொக்கெட் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ள விமானத் தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் குண்டு தாக்குதல்களில் குறைந்தது நான்கு ஈராக் படையினர் காயமடைந்துள்ளனர்.

ஈராக் தலைநகர் பக்தாதில் இருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் அல் பலாத் விமானத்தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டு கட்யூஷா ரொக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன என்று ஈராக் இராணுவ மையம் குறுப்பிட்டுள்ளது.

இதில் விமானத் தளத்திற்குள் இருக்கும் உணவு விடுதி மீது ஒருசில ரொக்கெட்டுகள் விழுந்திருப்பதோடு ஏனையவை ஓடுபாதை மற்றும் வாயில் கதவு பகுதியில் விழுந்திருப்பதாக ஈராக் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதல் இடம்பெறும்போது அந்தத் தளத்தில் எந்த அமெரிக்கப் படையினரும் இருக்கவில்லை என்று அமெரிக்க கூட்டுப்படை குறிப்பிட்டுள்ளது.

ஈராக் இராணுவ வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த இரு வாரங்களாக அமெரிக்கா–ஈரான் இடையே பதற்றம் அதிகரித்த சூழலில், அல் பலாத் விமானப் படை தளத்தில் இருந்த பெரும்பாலான அமெரிக்க விமானப் படையினர், அந்நாட்டு ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். 15 அமெரிக்க வீரர்கள் மட்டுமே தற்போது அல் பலாத் விமானப் படை தளத்தில் உள்ளனர். அவர்களுக்கான ஒரு விமானம் மட்டும் அங்கு உள்ளது” என்றன.

அல்-பலாத், ஈராக்கின் எப்–16 ரக விமானங்களைக் கொண்ட முக்கியமான விமானப்படைத் தளமாகும். விமானப்படையின் பலத்தை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து இந்த விமானங்களை ஈராக் வாங்கியது.

ஈரான் தளபதி பக்தாதில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

“ஈராக்கில் உள்ள மற்றொரு விமானத் தளத்தின் மீது ஆத்திரமூட்டும் மற்றொரு ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோ ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“ஈராக் அரசுக்கு ஆதரவளிக்காத குழுக்கள் மூலம் ஈராக்கின் இறைமை தொடர்ந்து மீறப்படுவதாக இது உள்ளது. இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Add new comment

Or log in with...