கடும் மழை, பனிப்பொழிவால் பாக், ஆப்கானில் 43 பேர் பலி | தினகரன்


கடும் மழை, பனிப்பொழிவால் பாக், ஆப்கானில் 43 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதியில் நீடித்து வரும் பனிப்பொழிவு, மழை மற்றும் வெள்ளம் ஆகிய மோசமான காலநிலையால் 43 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதான வீதிகளை சுத்தம் செய்வது மற்றும் மீண்டும் திறப்பது அதேபோன்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதில் நிர்வாகம் போராடி வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இதில் பாகிஸ்தானில் 25 பேர் உயிரிழந்திருப்பதோடு தென்மேற்கு பலுகிஸ்தான் மாகாணம் அதிகம் பாதிப்படைந்துள்ளது.

ஆறு அங்குலம் அளவுக்கு பனி பொழிந்திருப்பதால் மாகாணத்தின் சில பகுதியில் பல பிரதான வீதிகளும் மூடப்பட்டுள்ளன.

மோசமான காலநிலையால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆப்கானிஸ்தானில் 18 பேர் உயிரிந்துள்ளனர்.

பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவினால் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் காபுலில் வசிக்கும் மக்கள் கடும் குளிரை சந்தித்து வருவதோடு வீதிகளை பனி மூடி இருப்பதால் போக்குவரத்துகள் தடைப்பட்டிருப்பதோடு வேலைக்குத் திரும்புவதிலும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.


Add new comment

Or log in with...