சாதனையன் சம்பியன் கிண்ண கிரிக்கெட் : அட்டாளைச்சேனை 2கே15 வெற்றி | தினகரன்

சாதனையன் சம்பியன் கிண்ண கிரிக்கெட் : அட்டாளைச்சேனை 2கே15 வெற்றி

'B08 போரம்' ஏற்பாடு

அட்டாளைச்சேனை 'B08 போரம்' நடாத்திய சாதனையன் சம்பியன் கிண்ணம் 2020 இற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை 2கே15 வெற்றிபெற்று சம்பியனானது.

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரியின்(தேசிய பாடசாலை) பழைய மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் 35 அணிகள் பங்கு பற்றி இருந்தன.

அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று வந்த இச்சுற்றுப் போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் (12) பிற்பகல் இடம்பெற்றன.

இறுதிப் பொட்டி நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிள் என்.எம்.அப்துல்லா கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சம்சுடீன் மற்றும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நஸீல், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல்.கமறுதீன், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இச்சுற்றுப் போட்டியின் முதல் அரை இறுதிப் போட்டி, ஒபேய் அணிக்கும் 2கே 15க்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் 2கே15 அணியினர் அபாரமாக ஆடி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தனர்.

மற்றுமொரு அரை இறுதிப் போட்டி, றப்சான் அணியினருக்கும் 2கே 11 அணியினருக்கும் இடம்பெற்றது. இப்போட்டியில் 02கே11 அணியினர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப் போட்டிக்கான நாணயச் சுழற்சியில் 02கே15 அணியினர் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 5விக்கட்டுக்கள் இழப்புக்கு 59 ஓட்டங்களை குவித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2கே11 அணியினர் குறித்த ஓவர் பந்துகளில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 51 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதனால் 2கே15 அணியினர் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இரண்டாமிடத்தை 2கே11 அணியினர் பெற்றுக்கொண்டனர். சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக எச்.எம்.அஸ்தான் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை தினகரன், அட்டாளைச்சேனை விசேட, பாலமுனை தினகரன், அம்பாறை சுழற்சி நிருபர்கள்


Add new comment

Or log in with...