நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட திஹார் சிறையில் ஒத்திகை

கருணை மனுவுக்கான முடிவு இன்னுமில்லை; நால்வருக்கும் 22ஆம் திகதி மரண தண்டனை!

புதுடில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நிர்பயா என்ற பெண்ணின் கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக திகார் சிறையில் நேற்றுமுன்தினம் ஒத்திகை நடைபெற்றது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவியான நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நால்வரையும் தூக்கிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் நான்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் வகையில் போலியாக நான்கு பொம்மைகளை வைத்து தூக்கிலிட்டு சிறை நிர்வாகம் ஒத்திகை பார்த்துள்ளது. ஒவ்வொரு குற்றவாளியின் உடல் எடையையும் கணக்கில் எடுத்து, அந்தந்த எடைக்கு ஏற்ப கல் மற்றும் மணலால் பொம்மைகளை உருவாக்கி அதனை தூக்கிலிட்டு சிறை நிர்வாகிகள் ஒத்திகை நடத்தியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் குற்றவாளிகள் நால்வரையும், மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லாட் தூக்கிலிடுவார் என்றும் உத்தரப்பிரதேச சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூக்கிலிடவிருக்கும் குற்றவாளிகளுடன் சிறைத் துறை அதிகாரிகள் தினமும் பேசி அவர்களது மனநிலையை சோதித்து வருகிறார்கள். இந்நால்வரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு சமர்ப்பித்திருக்கிறார்கள்.

அதற்கான முடிவு இன்னும் வரவில்லை. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தால் திட்டமிட்டபடி 22ம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்.

கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டால் தூக்குத் தண்டனை ஆயுட் கால தண்டனையாக மாற்றப்படும்.

எனினும் இந்நால்வருக்கும் கருணை அளிக்கப்பட மாட்டாது என்றே நம்பப்படுகிறது.


Add new comment

Or log in with...