டெங்கு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வீழ்ச்சி! | தினகரன்


டெங்கு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வீழ்ச்சி!

நுளம்புகளால் மனித இனத்துக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சாதாரண மனித வாழ்க்கையை முற்றாக செயலிழக்க செய்யும் அளவிற்கு அவை பலம் பெற்றுள்ளன. அதன் காரணமாக இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் வெற்றியளிக்கவில்லை. நாட்டில் தற்போது டெங்கு தீவிரம் பெற்றுள்ளது.

வரலாற்று காலத்தில் நுளம்புகளால் மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்த தருணங்கள் பல உள்ளன. விசேடமாக மலேரியா, யானைக்கால் நோய் என்பன அவற்றுக்குச் சான்றாகும். தற்போதும் டெங்கு மக்களின் வாழ்க்கையில் அதேபோன்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இலங்கையில் விஞ்ஞான ரீதியாக டெங்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டது 1962 இல் ஆகும். 1988 இலும் 2014 இலிலும் டெங்கு தொற்று நோயாக பரவியது. இப்போது டெங்கு அதிகமாக உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது.

தொற்றுநோய் ஆய்வு பிரிவின் தரவுகளுக்கமைய 2019 நவம்பர் மாதமளவில் டெங்கு என சந்தேகிக்கப்படும் 73601 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். ஒக்டோபர் மாதம் டெங்கு நோயால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 என ஊடகங்கள் தெரிவித்திருந்தன. 2017 ம் ஆண்டு டெங்கு நோயாளிகள் 186101 பேர் காணப்பட்டனர். மரணமானவர்களின் எண்ணிக்கை 215 என்று பி.பி.சி. அறிக்கை வெளியிட்டிருந்தது.

2018ம் ஆண்டு டெங்கு என 51659 பேர் சந்தேகிக்கப்பட்டனர். இதுவரை 2017 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது டெங்கு நோயின் தாக்கம் குறைந்திருந்தது. அதற்கு காரணம் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தரமான சிகிச்சையேயாகும். ஆனால் இந்நாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது எனக் கூற முடியாது.

டெங்கு நோயை கட்டுப்படுத்த இதுவரை வெற்றிகரமாக மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் பாதுகாப்பான ஒரே வழி நோயைப் பரம்பும் நுளம்புகள் பரவாமல் தடுப்பதேயாகும். டெங்கு நுளம்புகள் எந்தவொரு சூழலுக்கும் இசைவாக்கம் அடையக் கூடியவை என இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் முட்டையிடும் எல்லா இடங்களையம்அழிப்பதே தற்போதுள்ள சாத்தியமான விடயமாகும்.

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி இறுதியிலிருந்து மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாக அறிக்கைகள் கூறினாலும் மழைவீழ்ச்சியின் மாற்றத்துடன் இந்நிலையில் மாற்றம் ஏற்பட வழியுண்டு. டெங்கு ஒழிப்பிற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை வெற்றியடையவில்லை. பொதுமக்களின் வரிப்பணமே வீணடிக்கப்பட்டது. நாடு பூராவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி 2013ம் ஆண்டு இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட BT I பக்றீரியாக்களால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. BT I பக்றீரியாவை பாவித்து கியூபாவில் டெங்குவை கட்டுபடுத்தியது போல இங்கும் கட்டுப்படுத்தலாம் என எண்ணி, அப்போதிருந்த சுகாதார அதிகாரிகள் 40 கோடி ரூபா பெறுமதியான BT I பற்றீரியாக்கள் கொண்ட பத்தாயிரம் லீற்றரை ஆகாயம் மூலம் நாடு பூராவும் விசிறும் நோக்கத்திலேயே கொண்டு வந்தார்கள்.

இரண்டு வார காலமே உயிர்ப்புடன் செயல்படக் கூடிய BT I பக்ரீரியாக்கள் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு காலாவதியாகும் வரை களஞ்சியப்படுத்தப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டதன் மூலம் சுகாதாரப் பிரிவின் மீது இது தொடர்பில் குற்றமும் சாட்டப்பட்டது.

டெங்குவை ஒழிக்க அரச அதிகாரிகள், டெங்கு பாதுகாப்பு இராணுவம், பொலிஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இணைந்து விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. நகரமயமாக்கலும் டெங்கு பரவுவதற்கு ஒரு காரணியாக அமைந்துள்ளது. நகரமயமாக்கல் காரணமாக நீர் வடிந்தோடும் கான்கள் தடைப்பட்டுள்ளன. அதற்கு பொறுப்புக் கூற வேண்டியது நகர சபையும் பிரதேச சபையுமாகும். டெங்கை ஒழிக்க நாம் சிரட்டைகள், யோகட் கோப்பைகள், ரம்பை மரம், வாழைமரம் போன்ற தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை அழிக்கின்றோம். ஆனால் நாம் நுளம்பின் வாழ்க்கை வட்டத்தை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதை கண்காணிக்க மதிப்பீடு மற்றும் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக தேசிய மட்டத்தில் 5 நிறுவனங்கள் சுகாதார அமைச்சில் அமைக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு, டெங்கு கட்டுப்படுத்தல் பிரிவு, மலேரியா கட்டுப்படுத்தல் பிரிவு, சுகாதார கல்விப் பிரிவு, யானைக்கால் நோய் தடுப்புப் பிரிவு என்பவையே அவையாகும். இந்நிறுவனங்களின் மூலம் டெங்கு நோய் ஒழிப்பு மற்றும் நோய்த் தடுப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க, தேவையான திட்டங்களை தயாரிக்க மற்றும் தொடர்பாடல்களுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆரம்பத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்த ஆர்வத்தை தற்போது நாடெங்கிலும் காண முடியாதுள்ளது. டெங்கு ஒழிப்பை தனிப்பட்ட பொறுப்பாக எண்ணி செயல்படுவது அனைவரினதும் பொறுப்பாகும். அதிகாரிகளிடம் குறைகள் இருந்தாலும் பொறுப்புள்ள குடிமக்களாக தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டிய கடமை பொதுமக்களுக்குண்டு.

 

துமிந்த சம்பத்
(தினமின) 


Add new comment

Or log in with...