தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் | தினகரன்


தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் எழுந்துள்ள மோதல் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் கட்சிகளிடையே கூட்டணி அமைவதும், உரசல்கள் ஏற்படுவதும் வாடிக்கையானது தான். ஆனால் அது அரசல் புரசலாக பேசப்பட்டாலும் பகிரங்கமாக வெடிப்பது இல்லை. அவ்வாறு வெடித்தால் அது கூட்டணிக்கு வேட்டு வைப்பதாகவே மாறும்.

அதே போல்தான் இப்போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் எழுந்துள்ள மோதல் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

பிணக்குகளை மறந்து 2014 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வும் காங்கிரசும் மீண்டும் கூட்டணி சேர்ந்தன. இந்த கூட்டணி வலுவான கூட்டணியாக தொடர்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்தான் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகிரங்கமாக வெடித்தது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தி.மு.க.வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘தி.மு.க.வின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்துக்கு எதிராக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார். இது தி.மு.க. வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அழகிரியின் கருத்தை ப.சிதம்பரமும் ஆமோதித்தார். அவரும் தி.மு.க.வின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்தார்.

தி.மு.க. மீது ஏற்பட்ட ஆத்திரத்தை காங்கிரஸ் தேர்தலிலும் வெளிப்படுத்தியது. தி.மு.க. வெற்றி பெறும் நிலையில் இருந்த பல இடங்களில் காங்கிரஸ் காலை வாரியதால் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.

உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் யூனியனில் தி.மு.க. 3 இடத்திலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர் கட்சி மாறி அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் தி.மு.க. தலைவர் பதவியை இழந்தது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து, அன்னவாசல் ஒன்றியம் ஆகியவற்றையும் காங்கிரஸ் கை மாறியதால் தி.மு.க. பறிகொடுத்தது.

இப்படி பல இடங்களில் காங்கிரசால் பதவிகள் பறிபோனது தி.மு.க.வை ஆத்திரப்படுத்தி இருக்கிறது. காங்கிரசின் செயல்பாடுகள் பற்றி டெல்லி மேலிடத்திலும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லி மேலிடம் அதை கண்டு கொள்ளவில்லை.

இந்த திடீர் மோதலுக்கான காரணம் பற்றி காங்கிரஸ் தரப்பில் கூறியதாவது:-

காங்கிரசை பொறுத்தவரை எல்லா தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. ஆனால் அதற்கேற்ப கூட்டணியில் முக்கியத்துவம் தருவதில்லை. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் டெல்லி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை வாங்கும்.

ஆனால் உள்ளாட்சி தேர்தல் வேறு விதமானது. உள்ளாட்சிகளில் பொறுப்புகளுக்கு வந்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும். எனவேதான் நாங்களும் ஓரளவு இடங்களை எதிர் பார்த்தோம்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்றே 180 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் இந்த தேர்தலில் எதிர்பார்த்த இடங்களை தி.மு.க. தரவில்லை. அது மட்டுமல்ல காங்கிரஸ் செல்வாக்கான இடங்களில் கூட காங்கிரசுக்கு இடங்கள் கொடுக்க தயங்கினர்.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு கணிசமான வெற்றிகளையும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு பிறகு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு சில இடங்களை தி.மு.க.விடம் கேட்டோம். இதுதொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.

மாவட்ட அளவில் பேசி முடித்து கொள்ளும்படி தெரிவித்தார்கள். ஆனால் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதுதான் பிரச்சினைக்கு காரணம் என்றார்கள்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் காங்கிரஸ் மீது பாய்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என அறிக்கை வெளியிட்டார்.

தி.மு.க. மீது பழியும் சுமத்தினார். மறுநாள் இதை அப்படியே மாற்றியும் பேசி உள்ளார். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். நேற்றைய பேச்சு நேற்றே போச்சு என கூறி இருந்தார். கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரஸ் இதுபோன்ற பிரச்சினையை தவிர்த்திருக்க வேண்டும். வெளியே பேசாமல் அவர்களுக்குள் பேசி தவிர்த்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவரின் இதுபோன்ற செயல் மூலம் கூட்டணிக்குள் சுணக்கம் ஏற்பட வழி வகுக்கும். காங்கிரஸ் இனிவரும் காலத்தில் இதுபோன்ற செயலை தவிர்ப்பது நல்லது. வெளிப்படையாக பேசுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடரும் இந்த மோதலால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...