எரியூட்டப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான பெண் மரணம்

தாபரிப்பு பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட குடும்ப மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது - 6,  ரீ.எம் வீதியில் கடந்த வியாழக்கிழமை (9) அதிகாலை பெற்றோல் கலனுடன்  திடிரென வீட்டினுள் உட்புகுந்த நபர் ஒருவர் அங்கு உறங்கிய பெண்ணை அழைத்து அவர் மீது பெற்றோல் ஊற்றி எரித்த நிலையில் படுகாயமடைந்த குறித்த பெண் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு 3நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (13) அதிகாலை உயிரிழந்தார்.

இதேவேளை குறித்த எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது - 6,  ரீ.எம் வீதியை சேர்ந்த கலந்தர் லெப்பை கமருன் நிஸா (வயது-42) என்ற 7பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான இப்றாகீம் உதுமாலெப்பை நிசார் (வயது-48) என்ற குடும்பஸ்தர் இறந்த பெண்ணின் முன்னாள் கணவராவார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்ட்ட இருவரும் தம்பதிகள் எனவும் ஒரு வருடத்திற்கு முன்னர் விவாகரத்து செய்த பின்னர் நீதிமன்றத்தில் அது தொடர்பான  வழக்குகளை சந்தித்ததுடன் தாபரிப்பு பணம் செலுத்திய விடயம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...