அரசியல்வாதியோ அதிகாரியோ தவறு செய்தால் உச்ச தண்டனை

எவருக்கெதிராகவும் பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட மாட்டாது

புதிய சட்டங்கள் இயற்றப்படமாட்டாது. பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்படவும் மாட்டாது.

நாட்டில் நடைமுறையிலுள்ள சாதாரண சட்டங்களுக்கிணங்கவே எவருக்கும் தண்டனை வழங்கப்படும் என மகாவலி, விவசாய நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தால் அது நானாகவிருந்தாலும்கூட குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தி அதற்குரிய தண்டனையே வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் குற்றவாளிகளை பாதுகாக்காது. எந்த பதவியிலிருந்தாலும் அவர் அரசியல்வாதியாக  இருந்தாலும் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு உச்ச தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அரச அதிகாரியொருவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்குவதற்கான முறைமையும் உள்ளது. அதற்கிணங்க அதனை நிறைவேற்றுவோம்.

இதற்கிணங்க குற்றவாளிகள் தொடர்பில் தகவல்களை பெற்றுத்தருவதற்கு நாட்டின் பிரஜைகளுக்கு உரிமையுண்டு. அவர்கள் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். அவ்வாறு கிடைக்கும் எந்த முறைப்பாடுகளையும் நாம் அலட்சியப்படுத்தப் போவதில்லை. அவை உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முறைப்பாடு உண்மையானதா அல்லது பொய்யானதா என ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரிசி விலை உயர்வு தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், ச.தொ.சவில் குறைந்த விலைக்கே அரிசி விற்பனை செய்யப்படுகின்றது. நெல் சந்தைப்படுத்தும் சபை அதன் வசமுள்ள நெல்லை அரிசியாக்கி ச.தொ.சவுக்கு மட்டுமே விநியோகிக்கின்றது. அதனை ச.தொ.ச. மட்டுமே பகிர்ந்தளிக்கிறது.

சில 'சுப்பர் மார்கட்டு'களில் ச.தொ.ச வை விடவும் குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.

நமது நாட்டில் பெரும்பாலானோர் நாட்டரிசியையே உபயோகிக்கின்றனர். நாட்டரிசி தொடர்பில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவில்லை.

பெருமளவு நாட்டரிசி விலங்கு உணவுக்காக கொள்வனவு செய்யப்படுவதாக தெரிய வருகிறது. அதற்கு எம்மால் பொறுப்புக்கூற முடியாது.

எனினும் சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்றிலிருந்து அரிசிக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் அனைத்து அரிசி வகைகளினதும் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

நமது நிருபர்


Add new comment

Or log in with...