சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்களுக்கு பொலித்தீன் முற்றாக தடை

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதால் யாத்திரிகர்களுக்கு பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.  

எதிர்வரும் புதன்கிழமை (11) ஆரம்பமாகும் சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தில் சூழல் மாசடைவதை முற்றாக தடுக்கும் வகையில் நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் இத்திடத்தினை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமைக்கு மாற்றீடாக யாத்திரிகர்களுக்கென இலவசமாக பயணப்பையை வழங்குவதுடன், பயண முடிவில் அந்த பையை திரும்ப கொடுத்துச் செல்லவும் இச்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.  

இரவு நேரங்களில் யாத்திரிகர்கள் செல்லும் வழியில் மின்சார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புக் கருதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தவும் ரயில் மார்க்கமாக வருகை தரும் யாத்திரிகர்களின் நலன்கருதி ஹற்றன் ரயில் நிலையத்திலிருந்து நல்லத்தண்ணி நகரம் வரை விசேட பஸ் சேவையை நடாத்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது . 

நல்லத்தண்ணி மலையடிவாரத்தில் அமைக்கப்படவுள்ள பொலிஸ் நிலையத்திற்கு மேலதிகமாக சீத்தக்குவ, ஊசி மலையுச்சி முதலிய இடங்களிலும் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 

ஆறுமாதங்கள் தொடரவுள்ள சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் வெசாக் போயா தினத்துடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

எம்.ஏ.அமீனுல்லா    


Add new comment

Or log in with...