குறைப்பிரசவ குழந்தைகளின் ஆரோக்கியம் | தினகரன்


குறைப்பிரசவ குழந்தைகளின் ஆரோக்கியம்

முன்பெல்லாம் குறைப்பிரசவக் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியாக வைத்து தான் பராமரிக்கப்பட்டனர். ஏனெனில் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதே இதற்கான காரணமாகும். இவ்வாறு பராமரிக்கப்படும் குழந்தையிடம் தாய் உள்ளிட்ட எவரையும் மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது இவ்வாறான குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்ட போதிலும் தாய்மார் அவர்களுடன் இருக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.  

தாயின் குரல், தாயின் அரவணைப்பு போன்றவை இவ்வகை குழந்தைகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்போது விரைவான முன்னேற்றம் ஏற்படுவதையும் கண்கூடாக அவதானிக்க முடியும். ஆரம்பத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தாயிடமிருந்து தாய்ப்பாலை பிழிந்து எடுத்துக்கொடுக்க ஆரம்பித்து, போகப்போக அந்தக் குழந்தை தானாக தாய்ப்பால் அருந்தும் திறனைப் பெற்றுக் கொள்ளும். அதனைத் தொடர்ந்து தாய்ப்பாலைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.  

தற்போதுள்ள தொழில்நுட்பம், ஆய்வுகள் போன்றவற்றால் ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துவிடும் போது நீண்டநாள் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.  

இருந்தாலும் குழந்தை அந்தந்த பருவத்தில் குப்புறப்படுத்தல், தவழ்தல், உட்கார்தல், நடத்தல் போன்ற செயல்களை செய்கிறதா? போன்ற விடயங்களைத் தாய் நுணுக்கமாக அவதானிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பிஸியோதெரபி சிகிச்சைகள் மூலம் குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். சில குழந்தைகள் பேசுவதற்கு கூட தாமதம் எடுத்துக் கொள்ளலாம்.  

அவ்வாறானவர்களை பேச்சு பயிற்சி மூலம் (ஸ்பீச் தெரபி) சரி செய்துவிடலாம். இவர்களின் கேட்கும் திறன், பார்வைத்திறன் போன்றவற்றை வருடத்திற்கு ஒருமுறையாவது சோதனை செய்து பார்த்து கொள்ள வேண்டும். இதுவும் கூட 30வாரங்களில் பிறந்த குறைப்பிரசவக் குழந்தைகளுக்குத்தான் ஏற்படக்கூடும்.

அதனால் ஏனையவர்கள் அச்சப்படத்தேவை இல்லை.  

மேலும் குறைப்பிரசவக் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் காணப்படும் என்பது குறித்தும் ஏனையவர்கள் அச்சப்படத் தேவையில்லை. என்றாலும் குழந்தையின் வளர்ச்சிப்படி நிலையை தாய் கூர்ந்து கண்காணித்து, மருத்துவ ஆலோசனையுடன் தவறாமல் சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போது இக்குழந்தைகள் ஏனைய குழந்தைகளைப் போன்று வெகு இயல்பான அறிவுத்திறன் கொண்டவர்களாக வளர்ந்துவிடுவர்.  

இருப்பினும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி அடைந்திருக்காது. அதன் விளைவாகவே மூச்சுத்திணறல் ஏற்படும். அதன் காரணத்தினால் முதலில் மூச்சுப் திணறல் பிரச்சினையைச் சீர்செய்ய வேண்டும். குறிப்பாக இவ்வகைக் குழந்தையின் நுரையீரலின் இயக்கத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு இக்குழந்தைகளின் சருமமும் மிகமிக மெல்லியதாக இருக்கும்.  

ஆனால் உடம்பின் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு தோல்தான் பாதுகாப்பு அரணாகும். தோல் மெல்லியதாக இருப்பதன் விளைவாக நோய்க்கிருமிகள் உடலினுள் எளிதாக சென்று விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் தான் குறைப் பிரசவக் குழந்தைகளை பாதுகாப்பாக பிளாஸ்ரிக் கவர் சுற்றி, இன்குபேட்டரில் வைக்கப்படுகின்றனர். அத்தோடு இக்குழந்தைகளின் உடல் வெப்பநிலையும் குறைவாகக் காணப்படும். அதனால் அவர்களை கதகதப்பிற்காகவும் இன்குபேட்டரில் வைத்திருக்க வேண்டும்.  

பொதுவாக கருவின் இறுதி இரு வாரங்களில்தான் சமிபாட்டு உறுப்புகள் வளர ஆரம்பிக்கும். அதனால் குறைமாதக் குழந்தைகளுக்கு பால் அருந்துவதற்கான ஆற்றலும் சமிபாட்டு திறனும் இருக்காது. மூச்சை தம்பிடித்து இழுக்கக்கூடிய சக்தி இக்குழந்தைகளிடம் காணப்படாததால் தான் அக்குழந்தைகளால் தாய்ப்பால் அருந்தவும் முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

இதன் விளைவாகவே எல்லா போஷணைச்சத்துக்களையும் ஊசி மூலமாக வழங்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனை சில வாரங்கள் வரை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  

என்றாலும் 28 -- 30 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் மெதுவாக 2,3 வாரங்களுக்குப் பின்னர்தான் பால் குடிக்கவே ஆரம்பிப்பார்கள். அதனால் குறைப்பிரசவ குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானதாகும். 


Add new comment

Or log in with...