குளிர்காலத்தில் இதயத்தின் செயற்பாடு

தற்போது குளிர்காலம் ஆரம்பித்துள்ளது. அதனால் இக்காலப்பகுதியில் உடலில் குளிர்த்தன்மை அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. அவ்வாறு உடலில் குளிர்ந்த வெப்பநிலை அதிகரிப்பது உடலின் குருதியோட்டத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும். இதன் விளைவாக குருதியோட்ட வேகம் குறைவடையத் தொடங்கும். இதயத்தமனிகளும் இறுக்கமடையலாம். அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.  

அதேநேரம் உடலில் குளிர் அதிகரிக்கும்போது சிலருக்கு குருதி உறையக்கூடும். அது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவான உபாதைகளுக்கு வழிவகுக்கலாம். இது மருத்துவ ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.  

அதனால் குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையை தக்கவைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது இதயத்தின் செயல் திறன் அதிகரிக்கும். அதற்கு அதிக ஒட்சிசனும் அவசியமானது. இவ்வாறான ஒருசில விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக குளிர்காலத்தில் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு உடல் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.  

மேலும் குளிர்காலங்களில் குளிர்ந்த பானங்கள், உணவு வகைகள் என்பவற்றை உண்பதையும் பருவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இக்காலப்பகுதியில் சூடான உணவு வகைகளை உண்பது தான் நல்லது.  

இதேவேளை, குளிர்காலத்தில் காய்ச்சல் போன்ற உபாதை ஏற்படும் போது இதயம் வேகமாகத் துடிக்கும். அப்போது குருதிக்கு தேவையான ஒட்சிசனின் அளவும் அதிகரிக்கும். எனினும் காய்ச்சல் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும். அதன் விளைவாக தாழ் இரத்த அழுத்த பிரச்சினையும் கூட உருவாகலாம். இத்தகைய மாற்றங்கள் மாரடைப்புக்கான அபாயத்தை அதிகரித்து விட முடியும்.  

குறிப்பாக இதய நோய் உபாதைக்கு உள்ளானவர்கள் மாரடைப்பு பாதிப்பை எதிர்கொள்ள  நேரிடும். அதனால் குளிர்காலத்தில் காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்கள் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்து கொள்வது நல்லது.  

உயர் குருதி அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட இதய நோய் உபாதைகளுக்கு உள்ளானவர்கள் குளிர்காலத்தில் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது இன்றியமையாததாகும். குறிப்பாக 65வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர்காலத்தில் பலவிதமான உபாதைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். பொதுவாக குளிர்காலத்தில் குருதி அழுத்தம் அதிகமாகக் காணப்படும். உடலில் வெப்பநிலை குறைந்து குருதி நாளங்கள் சுருங்குவதால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அத்தோடு குளிர்காலத்தில் விட்டமின் -டி அளவும் உடலில் குறைந்து போகலாம். குருதியில் அதன் தாக்கம் வெளிப்பட்டு அது குருதி அழுத்தம் அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிடலாம்.  

ஆகவே குளிர்காலத்தில் முறையான உடற்பயிற்சியில் ஈடுபடல், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கையாளுதல் என்பவற்றை மேற்கொள்ள வேண்டும். அவை உயர் குருதி அழுத்தப் பாதிப்பை குறைக்கப் பெரிதும் உதவும். அத்தோடு குளிர் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிந்து உடலை சூடாக வைத்திருப்பதும் நல்லது. தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வர வேண்டும். அது குருதி அழுத்தத்தை குறைக்க உதவும்.  


Add new comment

Or log in with...