தலைவலி | தினகரன்


தலைவலி

உபாதைக்கான காரணங்கள் என்ன? 

ஒற்றை தலைவலி (Migraines) என்பது பரம்பரையாகவும் வர முடியும். அதேநேரம் பெற்றோரில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால் அது பிள்ளைகளுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50வீதமாக உள்ளது. அது பெற்றோர் இருவருக்கும் இருந்தால் பிள்ளைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு 75வீதம் என்று மருத்துவ துறையினர் கருதுகின்றனர்.  

இத்தலைவலியானது முன்னெச்சரிக்கையுடனோ அல்லது சமிக்ஞையுடனோ அல்லது அவை இரண்டும் இன்றியோ ஏற்படக்கூடும். குறிப்பாக சமிக்ஞைகள், திடீரென்று தோன்றி மறையும் பார்வைக் கோளாறுகள், தோலில் தொடு உணர்ச்சி, நல்ல மணம் அல்லது துர்நாற்றம், காதில் இரைச்சல், இசை, பேசும் குரல்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை  அல்லது பலறை ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன்னர் நோயாளரால் உணரக்கூடியதாக இருக்கும். 

இத்தலைவலியைத் தூண்டக்கூடிய சில காரணிகள் உள்ளன. அவற்றை அறிந்து, தவிர்த்துக்கொண்டால் இத்தலைவலியை ஓரளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக ‘டைரமின்’ என்னும் இரசாயனப் பொருள் அதிகமாக உள்ள அழுகிப்போன வாழைப்பழங்கள், சொக்லேட், மது வகை போன்றவை ஒற்றை தலைவலியைத் தூண்டக்கூடும். அதிக நறுமணமுள்ள வாசனைப் பொருட்கள், மாதவிடாய் மற்றும் ஹோர்மோன் மாற்றங்கள், சோர்வு, கண்கூசும் வெளிச்சம், அதிகத் தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதிகம் கோப்பி அருந்துதல், சில கொழுப்பு உணவு வகைகள், நீண்ட நேரம் கணினியைப் பார்த்தல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவையும் ஒற்றை தலைவலியை தூண்டவல்லவை. இவை தொடர்பில் அறிந்து செயற்படுவது அவசியம்.  

இந்த உபாதைக்கான அறிகுறி வெளிப்படும் நிலையில் அல்லது வலி மிதமாக இருக்கும் நிலையில் உரிய மாத்திரையைப் பாவித்தால் இத்தலைவலி ஓரளவு கட்டுப்படும். ஆனால் மிகத் தீவிர வலி, வாந்தி ஏற்படுமாயின் சில சமயம் மருந்துகளால் கூட கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.  

அதன் காரணத்தினால் ஒற்றை தலைவலியை தூண்டும் காரணிகளைத் தவிர்த்துக்கொள்வதே நல்லது. அதுவே இந்நோயைத் தவிர்த்துக் கொள்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.  

இதேவேளை இன்றைய காலகட்டத்தில் 30 - 40வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மனப்பதற்றத்தால் உருவாகும் தலைவலி அதிக அளவில் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 90வீதம் மகளிருக்கும், 70வீதம் ஆண்களுக்கும் இவ்வகை தலைவலி ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  

என்றாலும் மிகக் குறைந்த அளவு மருந்துகள், அளவான ஓய்வு, நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவை மனதையும் உடலையும் தளர்த்தி, இவ்வகைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதாகும். அத்தோடு ஐஸ் ஒத்தடம், இளஞ்சூடான நீரில் குளித்தல், சரியான நேர நிர்வாகம், அக்குபஞ்சர், சுவாசப் பயிற்சி, மனோ நிலை, நடத்தை முறையை மாற்றும் பயிற்சிகள், மசாஜ், சாவகாசமான பயிற்சிகள் போன்றனவும் இதற்கு உதவும். 

ஆனால் திட்டமிட்ட, அமைதியான, ஆரோக்கியமான, உடல், உள நிலையுடன் கூடிய வாழ்க்கை முறை மனப்பதற்றத்துடன் கூடிய தலைவலிக்கு சிறந்த தீர்வாக அமையும்.  

 இவை இவ்வாறிருக்க மனிதன் எதிர்கொள்ளும் மற்றொரு தலைவலி தான் கிளஸ்டர் தலைவலி அல்லது ‘கொத்துத்’ தலைவலி என்பதாகும்.

அது ஒற்றை தலைவலியைப் போன்று ஏற்படக்கூடியதாகும். ஆனால் இது தினமும், பல முறை கொஞ்ச நேரமே ஏற்படும். சில சமயம் சில நாட்கள் அல்லது சில மாதங்கள் இருந்துவிட்டு பிறகு ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை காணாமல் போய்விடக் கூடியது. இவ்வகைத் தலைவலி   புகைபிடித்தல், மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு அதிகம் ஏற்படலாம். இந்த வலியின் கொடுமை மிகவும் தீவிரமானது. அதனால் இவ்வகைத் தலைவலி வந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையையும், சிகிச்சையையும் பெற்றுக்கொள்வதே ஆரோக்கியத்திற்கு உகப்பானதாக இருக்கும். 


Add new comment

Or log in with...