அரைகுறையில் கைவிடப்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை | தினகரன்


அரைகுறையில் கைவிடப்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் எட்டாயிரம் ஏக்கர் வேளாண்மைச் செய்கை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக வாழைச்சேனை, கிரான், வாகரை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் அணைக்கட்டுக்கள் சில உடைப்பெடுத்த நிலையில் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகளின் நெல்வயல்கள் அழிந்தன.

குறிப்பாக மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்தமையினால் பொத்தானை அணைக்கட்டு இருபத்தைந்து அடி நீளத்துக்கு உடைப்பெடுத்தமையினால் பொத்தானை பிரதேசத்தில் பெரும் பரப்பிலான விவசாய நிலங்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்தமையினால் எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மைப் பயிர்களை முற்று முழுதாக இழந்த நிலையில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தாங்கள் பெற்றுக் கொண்ட கடன் தொகையை எவ்வாறு மீளச் செலுத்துவது என்ற கவலையில் அவர்கள் உள்ளனர். 

வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவில் பெரிய நீர்ப்பாசனம், சிறிய நீர்ப்பாசன குளங்கள், மாதுறு ஓயா வடிச்சல் என்பவற்றை நம்பி விவசாயச் செய்கையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவில் எட்டாயிரம் ஏக்கர் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆற்றோரமாக உள்ள நெற்காணிகளில் ஆறாயிரம் ஏக்கரும், மண் வார்ப்பு காரணமாக இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

அத்தோடு மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்தமையினால் அணைக்கட்டுக்கள் உடைபெடுத்ததன் காரணமாக பல விவசாய நிலங்கள் மண்வார்க்கப்பட்டு விவசாயச் செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டதாக ரசீட் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கதிர் வெளியேறும் நிலையில் காணப்பட்ட வேளாண்மைகளில் நெல் வீரியம் குறைந்த நிலை காணப்படுகிறது. பதர் தன்மையாகவும் காணப்படுகின்றது. அத்தோடு சில வேளாண்மைகளில் நோய்த் தாக்கத்தை அவதானிக்க முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

​பெரும்பாலான விவசாயிகள் தனவந்தர்கள் அல்லர். விவசாயத்தை நம்பி பல இடங்களில் அவர்கள் கடன் பெற்றுள்ளனர். அறுவடையில் கிடைக்கும் பணத்தில் கடனை மீளச் செலுத்தி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

"நாங்கள் பல இடங்களில் கடன் பெற்று விவசாயத்தினை மேற்கொண்டு வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக எங்களது விவசாயச் செய்கை முற்றாக பாதிக்கப்பட்டது. இதனால் நாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதில் பாரிய கஷ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றோம். விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழும் எங்களது நிலைமை இவ்வாறு உள்ளதால் எங்களது குடும்ப உறவுகள் வாழ்வதற்கு பெரும் கஷ்டமான நிலையில் உள்ளனர். விவசாயத்திற்கு பட்ட கடனை அடைப்பதா அல்லது எங்களது குடும்ப வாழ்க்கைச் செலவுக்கு மீண்டும் கடன் பெறுவதா என்ற கவலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர்" என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது தங்களது விவசாய நிலம் தற்போது விளையாட்டு மைதானம் போன்று மணலால் சூழ்ந்து வெறும் தரையாக உள்ளதாகவும், மீண்டும் விவசாயம் செய்வதாயின் வயல் நிலத்தினுள் காணப்படும் மண்ணை அகழ்வு செய்த பின்னர்தான் செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

"வயலினுள் காணப்படும் மண்ணை அகழ்வதற்கு கூட எங்களிடம் தற்போது பணம் இல்லை. இதனை நிவர்த்தி செய்வதற்கு எங்களால் முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளோம்" என்கின்றனர் விவசாயிகள். 

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  உரிய நஷ்ட ஈட்டினை வழங்க அரசு முன்வர வேண்டும். இந்த விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை உரிய முறையில் நியாயமாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்
(கல்குடா தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...