இந்தியா நெருக்கடி நிலையில் உள்ளது

உச்சநீதிமன்றம் கருத்து

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனு தொடுத்திருந்தார்.

அந்த மனுவிற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் "நாடு நெருக்கடி நிலையில் உள்ளது. நாட்டில் அமைதியை கொண்டு வரும் முயற்சிகள் வேண்டும். இம்மாதிரியான மனுக்கள் அதற்கு உதவாது" எனத் தெரிவித்துள்ளது.

வன்முறை நிறுத்தப்பட்டவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்பு ரீதியானது என அறிவிக்க வேண்டும் என்று கோரி, அவரின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாக சட்ட விவகார செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி தெரிவித்துள்ளார்.

'இவ்வாறான வழக்குகள் தொடரப்படுவதன் மூலம், நீங்கள் பதற்றத்தை அதிகரிக்க செய்கிறீர்கள்' என்று வழக்கறிஞர் தாண்டாவிடம் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.

'அரசமைப்புக்கு உட்பட்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை மீண்டும் அரசமைப்பு சட்டமாக மாற்ற வேண்டும் என்பதை நாங்கள் இதுவரை கேள்விப்பட்டது இல்லை' என்றும் பாப்டே தெரிவித்துள்ளார்.

பல விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோரியது.

இதுகுறித்து தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முடிவு செய்யும்.

முதல் கட்டமாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு குறித்து உயர் நீதிமன்றங்கள் விசாரணை மேற்கொள்ளும், பிறகும் அதில் எதுவும் குழப்பம் நேரிட்டால், அல்லது வழக்கை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டால், உச்சநீதிமன்றம் தலையிடும் என நீதிபதிகள் பி. ஆர். கவாய் மற்றும் சூரியகாந்த் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் ஜி மேத்தா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து வெவ்வேறு உயர் நீதிமன்றங்கள் முரண்பட்ட கருத்துகளை கூற வாய்ப்புள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும், எனவே இதில் பல சிக்கல்கள் உள்ளன என கருத்து தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...