தீராநதி - முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி | தினகரன்


தீராநதி - முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி

தெளிவான அரசியல் புலமையும், அதனூடான உரையாடலும் வரலாற்றின் நினைவுத் தருணங்களில் கலைஞரை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும். இறுதிக் காலங்களில் கலைஞரால் குறுக்கு நெடுக்காக படுக்க முடியாமலிருந்தது, எழுந்து நின்று சுவாசிக்க முடியாமலிருந்தது,

நிமிர்ந்து நின்று பேச முடியாமலிருந்தது. ஆனாலும் சிந்திப்பதற்கான அவரது மூளையும், கம்பீரமான அவரது இருதயமும் துடிதுடிப்பான மனிதனாக அவரை செயற்பட வைத்தது. வாசிப்பின் உன்னதத்தினையும், எழுத்துக்களின் வீரியத்தினையும் கலைஞர் புரிந்து கொண்ட நிலைப்பாட்டிற்கு ஏற்ப, இங்கு யாருமே புரிந்து கொண்டதில்லை. அவரது படைப்புகளும், பத்திகளும் இவற்றினையே பேசிச் சென்றன. அவற்றின் மீது அவர் தீராத நம்பிக்கை கொண்டிருந்தார் எழுத்துக்களின் வழியாகவே தனக்கான சுவாசத்தினை அனுபவித்தார். கலைஞர் மரணிக்கும் வரை இயங்கிக் கொண்டிருந்தார் என்பதே பெருவெடிப்பாய் நிகழ்ந்திருக்கிறது. 

கலைஞரின் அரசியல் வெளிப்பாட்டு நியமங்கள் மிக விசித்தரமானவை. அவை பொருந்தியிருக்கும் நிலைப்பாட்டில் பெரும் கட்டுடைப்பினைச் செய்திருக்கின்றன. இப்படித்தான் கலைஞரின் வாழ்வும் பிண்ணப்பட்டிருக்கிறது. இலக்கியப் போக்கில் கலைஞர் எழுதிய கதைகளின் செயற்பாடு மிக முக்கியமானது.

அக்கதைகளில் பரவிக் காணப்பட்ட மிக முக்கியமான இயல்பு யாதெனில் அவை பிறக்கின்ற இடமும், பிறப்பிக்கப்படுகின்ற மனிதர்களுமாகும். கலைஞரின் கதைகளில் பேச வேண்டிய பொருளினை வரையறை செய்வது கடினமாக இருப்பினும் அக்கதைகள் கொண்டிருக்கின்ற உணர்வுகள் நுட்பமான அரசியலினைப் பேசக் கூடியவையாக இருக்கின்றன.

ஒரு படைப்பினை நாம் எது சார்ந்து படைக்கிறோம் என்பது முக்கியமல்ல. மாறாக அப்படைப்பானது எது சார்ந்து எம்மை பேச வைக்கிறது என்பதே அதன் காத்திரம் என நம்புகிறவன் நான். கலைஞரின் சினிமாவினைப் பொறுத்தவரையிலும் இவ்வாறான சங்கதிகளே நிகழ்ந்திருக்கின்றன.

கலைஞரின் எழுத்து மொழியினை எப்படி எத்திவைப்பது என்று குழம்பிக் கொண்டிருக்கும் வெளிப்பாடகவே அவரது சினிமாக்கள் அமைந்திருக்கின்றன. அவரது சமூக விடுதலை உணர்வுகள் எதனைப் பேச நினைக்கிறதோ அதனை சொற்களில் செய்து காட்டியிருக்கிறார்.  

காற்று வேகமாக வீசி ஓய்ந்ததைப் போலவும், பெருவெளிச்சமாய் மின்னிய நட்சத்திரம் உதிர்ந்ததைப் போலவும் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் கலைஞர். அவரது கலையும், அரசியலும் எழுத்துக்களும், தன்னம்பிக்கையும் இப்பிரபஞசத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அவை பெருத்த மரங்களாக வளர்ந்து எம் ஆழ் மனதினை நிரப்பிக் கொள்ளும்.

அவருக்காக ஒதுக்கப்பட்ட மண்ணறையில் நிசப்தமாய் தூங்கட்டும். மண்ணறையின் நீண்ட பரப்புக்களில் அவரது கால்கள் ஓடி விளையாடித் திரியட்டும். அவரது எழுத்துக்கள் புத்தம் புதிய சிந்தனைகளை இங்கு பிறப்பித்துக் கொண்டேயிருக்கும். அதுவரைக்கும் அவரது சுவாசத்தின் இடைவெளியில் காற்று நிரம்பியிருக்கட்டும்.  


Add new comment

Or log in with...