அமெரிக்காவுக்கு 'தரைஓடுகள்' ஏற்றுமதி: லங்கா டைல்ஸ் முடிவு | தினகரன்


அமெரிக்காவுக்கு 'தரைஓடுகள்' ஏற்றுமதி: லங்கா டைல்ஸ் முடிவு

இலங்கையின் முன்னணி சுவர் மற்றும் தரை டைல்களின் உற்பத்தியாளரான லங்காடைல்ஸ், சீனாவின் மொசாயிக் டைல் உற்பத்தியாளரான Foshan Shiwan Yulong செரமிக் கம்பனி லிமிடெட் உடன் கைகோர்த்துள்ளது. இலங்கையிலுள்ள லங்காடைல்ஸ் தொழிற்சாலைகளில் மொசாயிக் டைல்கள் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதுடன், அதனூடாக சர்வதேச சந்தைகளுக்கு மொசாயிக் டைல்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் மொசாயிக் டைல்களுக்கு நிலவும் அதிகளவு கேள்வியை கவனத்தில் கொண்டு வட அமெரிக்கா அடங்கலாக வெளிநாட்டு சந்தைகளுக்கு மொசாயிக் டைல்கள் ஏற்றுமதி நடவடிக்கையை லங்காடைல்ஸ் முன்னெடுக்கவுள்ளது. இந்த பங்காண்மையில் வட அமெரிக்காவின் பிரதிநிதியான பென்ஜமின் மல்லோய்யும் முக்கிய பங்கினை வகிக்கின்றார்.  

40வருடங்களுக்கு மேலாக வட அமெரிக்காவில் நன்மதிப்பைப் பெற்ற வர்த்தக நாமமாக லங்காடைல்ஸ் திகழ்கின்றது. அந்நாட்டின் சந்தைச் சூழல் தொடர்பில் நிறுவனம் நன்கு அறிந்துள்ளமையால், மொசாயிக் டைல்களை இலகுவாக குறித்த சந்தைக்கு ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும். வளர்ச்சிக்காக தொடர்ச்சியான வாய்ப்புகளை இனங்காண்பதன் ஓர் அங்கமாக, தற்போது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையே நிலவும் பொருளாதார தடைகளை தொடர்ந்து, சீனாவின் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள இந்த கைகோர்ப்பினூடாக, லங்காடைல்ஸ் நிறுவனத்துக்கு மூலோபாய அனுகூலத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கும். உள்நாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக திகழ லங்காடைல்ஸ் தனது பரந்தளவு தயாரிப்பு தெரிவுகளுடன் மொசாயிக் டைல்கள் ஏற்றுமதியையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.  

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில அடங்கலாக 12 உயர் தர சந்தைகளுக்கு லங்காடைல்ஸ் தனது ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. நிறுவனத்தின் சமகால விரிவாக்கல் செயற்பாடுகளில், 2.5 பில்லியன் ரூபாய் செலவில் 6000 சதுர மீற்றர்களுக்கு அதிகமான உற்பத்தி கொள்ளளவு பகுதி ரனால பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து லங்கா எனும் நாமத்தைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ள ஒரே ஒரு வர்த்தக நாமமாக லங்காடைல்ஸ் திகழ்கின்றது.    


Add new comment

Or log in with...