அம்பிகை பாகனின் செல்வச் சந்நிதி முருகன் கலைத்தேர் | தினகரன்


அம்பிகை பாகனின் செல்வச் சந்நிதி முருகன் கலைத்தேர்

எமது இலக்கியங்கள் பல இடங்களில் தேரினைப் பற்றிப் பேசுகின்றன. செல்வச் சந்நிதி முருகன் கலைத்தேர் தேர் உருவாக்கத்தின் பல்வேறு பின்னணிகளை ஆராய்கிறது அம்பிகை பாகனின் இந்நூல்.

 சட்டென நினைவுக்கு வருகின்ற எஸ். பொன்னுத்துரையின் ‘தேர்’ என்ற சிறு கதை, மஹா கவியின் ‘தேரும் திங்களும்’ என்ற கவிதை, நீல, பத்மநாதனின் ‘தேர் ஓடும் வீதியிலே’ நாவல்.... இந்நூலினைப் படிக்கும் போது இவ்வாறு பல்வேறு சிந்தனைகளை இந்நூல் கிளர்த்துகின்றது.

‘செல்வச்சந்நிதி முருகன் கலைத்தேர் என்ற நூல் அதன் அமைப்பியலும் வரலாறும் என்பதற்கு அப்பாலும் பல விடயங்களைப் பேசுகின்றது.

தேரின் கலைநுட்பம் தொழில் நுட்பம் என்பனவும் தேர் பற்றிய வரலாற்றுக் குறிப்பாக செல்வச் சந்நிதித் தேர் பற்றிய வரலாறும் பேசப்படுகின்றன. அத்தோடு தேர் அமைப்பின் பாணிகள், தேர்க் கலைஞர்கள், மரச்சிற்பங்களின் அழகியல், யாழ்ப்பாணத்துக் கட்டட சிற்பக் கலைப் பாரம்பரியம், பண்டைய மயிலிடடியின் பெருமைகள், அங்கு அமைந்திருந்த தமிழ்ச் சங்கம் என்றெல்லாம், இந்நூல் எம்மை வியக்க வைக்கிறது.  செல்வச் சந்நிதி ஆலயத்தில் 1984இல் உருவாக்கப்பட்ட கலைப்பெருந்தேர் 1986இல் எரியூட்டப்பட்ட வரலாறு நாம் அறிந்ததே. அதைத் தொடர்ந்து 1987இல் வடமராட்சியில் நிகழந்த பேரழிவுகள் அனர்த்தங்களையும் நாம் அறிவோம். பின்னர் நிகழ்ந்த திருவிழாவில் பழைய கட்டுத் தேரிலேயே முருகன் வீதியுலா வந்தார்.

மீண்டும் அனர்த்தம் நிகழ்ந்தது. 2003ஆம் ஆண்டுத் திருவிழாவில் ஆலய மேற்கு வீதியில் தேர் உடைந்து முருகன் கீழே சரிந்தார். ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான பக்தர்களின் மனம் பதவியது, துடித்தது.

என்ன விபரீதங்கள் நிகழப் போகின்றனவோ என்று அஞ்சிய போதிலும் ஓர் அதிசயமும் நடந்தது. இலங்கை வரலாற்றில் முதன் முதலாக அரசின் ஆதரவுடன் ஒரு தேர் உருவாக்கம் பெற்றது.

அதுவே 2004ஆகஸ்டில் வெள்ளோட்டம் கண்ட செல்வச்சந்நிதி முருகன் கலைத்தேர். இத் தேர் உருவாக்கத்தின் பல்வேறு பின்னணிகளை ஆராய்கிறது அம்பிகை பாகனின் இந்நூல், இத்தேர் உருவாக்கத்தின் ஊடாகவே ஜெயகாந்தன் என்கிற இளைய தேர்க்கலைச் சிற்பி உருவாகின்றார். அவரின் குடும்பப் பாரம்பரிய பின்னணி, கல்விப் பின்னணி, பயிற்சிப் பின்னணி என்பன பற்றி எல்லாம் இந்நூல் பேசுகின்றது.

அவர் ஆசாரமான புகழ்பெற்ற குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இவரே தமிழக பாணியும் யாழ்ப்பாண பாணியும் கலந்தமைந்த புதியதோர் பாணியில் கலைத் தேரை உருவாக்குகின்றார்.

இவரின் பாரம்பரிய குடும்பப் பின்னணியில் பல உண்மைகள் புதையுண்டு கிடக்கின்றன. இராஜசிற்பி சங்கிலித் தவிண்டையர் அவற்றிலொன்று; மயிலிட்டியில் இயங்கிய தமிழ்ச் சங்கம் பற்றிய செய்திகள் இன்னொன்று இப்படி புதையுண்டு கிடக்கும் ஏராளமான புதிய செய்திகள், தகவல்கள் அம்பிகைபாகனின் இந்நூலினால் வெளிச்சம் பெறுகின்றன.

கலாரசிகர்களாலும் மற்றவர்களாலும் பெரிதும் அறியப்படாத அல்லது கவனம் பெறாத மரச்சிற்பங்கள், கதைச் சிற்பங்கள் பற்றிய கவனத்தையும் ஈடுபாட்டையும் இந்நூல் கோருகின்றது. அண்மைக் காலங்களில் கலாரசிகர்களின் கவனத்தைப் பெற்ற ஆனந்தனின் சுனாமி அழிவு பற்றிய மரச்சிற்பங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் காட்சிப்படுத்தப்பட்ட விஷ்வலிங்கத்தின் மரச் சிற்பங்களைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், காலாதி காலமாக எம் கோயில் தேர்களில் அழகிய அமைந்திருக்கும் மரச் சிற்பங்களை நாம் பார்த்தோமா தேர் விதானங்களில் அமைந்துள்ள அலங்கார வேலைப்பாடுகளில் மனதைப் பறிகொடுத்தோமா கோயில் கோபுரங்களில் கொழுவிருக்கும் கதை சிற்பங்களை இரசித்தோமா? தமிழ் இலக்கியங்களில் வரும் அற்புதமான பாடல்களைத் தந்த பெயர் தெரியாத கவிஞர்களைப் போல் இந்தக் கலைப்படைப்புக்களைத் தந்த பெயர் தெரியாத கலைஞர்களை நாம் அறிவோமா? அற்புதமான மரச்சிற்பங்களை வடித்த கலைஞர்களை இந்நூல் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டுகிறது.

எம்முன்னோர்கள் தமது வாழ்வின் தேரோடு பின்னிப்பிணைந்த பழமொழிகள், மரபு வாக்கியங்கள் ஏராளமாக புழக்கத்திலுள்ளன. எமது இலக்கியங்கள் எவ்வளவோ இடங்களில் தேரினைப் பற்றிப் பேசுகின்றன. அற்புதமான தமிழ் நடையில், பல்வேறு வகையான தகவல்களையும் உண்மைகளையும் தொட்டுக்காட்டி விமர்சன முறையில் இந்நூலைப் படைத்தளித்த அம்பிகைபாகன், பாராட்டுக்கு உரியவராகின்றார்.                          

குப்பிளாய்
ச.சண்முகன்...
(கரணவாய், கரவெட்டி)


Add new comment

Or log in with...