7 பேர் விடுதலையில் அரசின் குறுக்கீடு தேவையற்றது

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் குறுக்கீடு தேவையற்றது, அநீதியானது என்று பாமக  தலைவர் டொக்டர் ச.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாமக  தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்துள்ள வழக்கில், 7தமிழர்களையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை சட்டத்தரணி முறையிட்டிருக்கிறார். 7தமிழர்கள் விடுதலை குறித்த இந்த வழக்கில், மத்திய அரசின் தலையீடு சிறிதும் தேவையற்றது. அநீதியானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று 2018செப்டம்பர் 6-ஆம் திகதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

 அதனடிப்படையில்தான், தமிழக அமைச்சரவை 7தமிழர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில் தம்மை விடுதலை செய்யாதது சட்டவிரோதம் என்றும் தம்மை விடுதலை செய்யும்படி ஆணையிட வேண்டும் என்றும் கோரிதான் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில் கூடுதல் தலைமை சட்டத்தரணி எந்த அடிப்படையில், தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளர் 2018ஏப்ரல் 18-இல் எழுதிய கடிதத்தை தாக்கல் செய்தார் என்று தெரியவில்லை. மத்திய அரசின் ஆணைப்படியோ அல்லது அனுமதி பெற்றோ இந்தக் கடிதத்தை அவர் தாக்கல் செய்தாரா அல்லது தன்னிச்சையாக செயல்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. ஆனால் இந்த வழக்கில் தலையிட மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.

7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர தமிழக ஆளுநருக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி காலவரையின்றி ஆளுனர் தாமதம் செய்வது அநீதியாகும் என்று அவர் கூறியுள்ளார். 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 


Add new comment

Or log in with...