நல்லிணக்கம், சகவாழ்வை கட்டியெழுப்பும் முயற்சி

இனநல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கு ஏற்றதாக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகளை அமைக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். பிரதமரின் இந்த எண்ணக்கரு புதியதொன்றல்ல. 2010_- 2015காலப் பகுதியில் ஆட்சியிலிருந்த போது ஜனாதிபதி என்ற அடிப்படையில் இது தொடர்பில் பல்வேறு செயற்பாடுகள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை மட்டத்திலிருந்தே தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதன் மூலம் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தவிர்க்க முடியும் என்ற தூரநோக்குடனேயே இத்திட்டத்தை அன்று மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.  

இதன் ஆரம்பப் பணிகள் 2012முதல் முன்னெடுக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த பேராசிரியர் அப்துல் கலாம் இங்கு வந்து அதற்கான பணியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இனம், மதம், மொழி என்பன மனித சமுதாயத்தை பலமடையச் செய்ய பயன்பட வேண்டுமேயொழிய பிளவுக்கும், பிரிவினைக்கும் பயன்படக் கூடாது என்பதை அன்னார் அன்று வலியுறுத்தியமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இளம் பருவத்தில் இன, மத ரீதியில் அல்லது மொழி ரீதியில் பிரிந்து செயற்படுவது மனித சமுதாயத்தை அழிவின் பக்கமே இட்டுச் செல்லக் கூடியதாகும்.  

நல்லொழுக்கமுள்ள சமூகமொன்றை உருவாக்குவதற்கு அறிவும், பண்பும் வளரக் கூடிய கல்வி முறையொன்றே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனை பாடசாலைக் கட்டமைப்பிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு சகல சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஒரே கூரையின் கீழ் கல்வியை புகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே மஹிந்த ராஜபக்ஷ இந்த மும்மொழிப் பாடசாலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  

இன்று எமது நாட்டு மக்கள் மத்தியில் கல்வி மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் பண்பு கட்டியெழுப்பப்படவில்லை. கல்வியும், பண்பும் ஒரு சேர கட்டியெழுப்பப்பட்டால் மட்டுமே ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும். கல்வியில் எந்தளவுக்கு உயர்ந்த நிலையில் காணப்பட்ட போதிலும் குணப்பண்புகள் உயர்வடையாதவர்களால் தேசத்துக்கு எந்தவிதமான நன்மையும் கிட்டப் போவதில்லை. இந்த அடிப்படையில்தான் அறிவும், நற்பண்பும் கொண்ட மாணவ  சமுதாயத்தை உருவாக்கக் கூடிய திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க முனைப்புக் காட்டி வருகின்றது.  

இன்று எமது பாடசாலைகளில் கற்கும் இளம் சந்ததியினரிடம் ஒழுக்கப் பண்பாடுகளை விட வன்முறை, போதைப்பொருள் பாவனைகளே அதிகரித்துக் காணப்படுகின்றன. நவீன கல்வித் திட்டத்தின் மூலம் எதிர்காலச் சந்ததியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியுமா? என்ற கேள்வியே எழுகின்றது. இன, மத, மொழி ரீதியில் பிளவுபட்டதன் காரணமாகவே பிரிவினைவாதமும், இனவாதமும் தலைதூக்கின. இதன் காரணமாக நாட்டு மக்கள் துருவமயப்படுத்தப்பட்டனர். வன்முறைக் கலாசாரம் மேலோங்கியுள்ளது. இந்த அவல நிலை நீடிக்க இடமளிக்கப்படக் கூடாது.   

எமது நாட்டின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கின்ற போது இன்று நாம் எங்கிருக்கின்றோம் என்பது குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. நீண்ட காலத்திற்கு முன்னர் எமது கல்விமுறையானது மத வழிபாட்டுத் தலங்களோடு  நெருக்கமான உறவைக் கொண்டதாகவே காணப்பட்டது. இதன் மூலம் ஒழுக்கப் பண்புகளும், கலாசார விழுமியங்களும் மேலோங்கியிருந்தன. காலப்போக்கில் மக்களிடமிருந்து இந்த விழுமியங்கள் கைநழுவிப் போனதன் விளைவாக மக்கள் பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.  

மேற்குலகின் ஏகாதிபத்தியம் தேசத்துக்குள் நுழைந்ததன் காரணமாக மக்களின் மனநிலை மாற்றம் கண்டது. ஆன்மிக விழுமிய போதனைகளிலிருந்து சமூகங்கள் தூரமாக்கப்பட்டன. மக்களிடையே பிளவும், பிரிவினையுமே ஊக்குவிக்கப்பட்டன. ஆன்மிகப் பண்புகளிலிருந்து விலகிய மக்கள் லௌகிகத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொள்ளத் தலைப்பட்டனர். இன்றளவும் கூட அந்த இருளிலிருந்து வெளியே வரமுடியாமல் சுவர்களுக்குள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றோம். இனங்களுக்கிடையேயான நேசக்கரங்கள் பிய்த்தெடுக்கப்பட்டு கறைபடியத் தொடங்கியுள்ளன.  

இவ்வாறானதொரு நிலையிலேயே தூரநோக்குடன் கூடிய புதிய சிந்தனையை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். சின்னஞ்சிறு வயது முதலே இனங்களை ஒன்றுபடுத்தி ஒரே கூரையின் கீழ் கல்வியைப் புகட்டுவதன் மூலம் ஒற்றுமையுள்ள, ஒழுக்கமுள்ள, நற்பண்புள்ள மக்கள் சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டிருக்கின்றார். பிரதமரின் இந்த நல்லெண்ண வெளிப்பாட்டுக்கு அனைத்துத் தரப்புகளும் ஆதரவளிக்க முன்வர வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்படும். மொழி தொடர்பான அறிவு மிகவும் அவசியம். இவ்வேலைத் திட்டமூடாக அதுநடைபெற இடமுண்டு.  

பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும். சிறு பராயத்தில் உள்ள கவனம் பின்னர் கைவிடப்படுகிறது. சிறியவர்களாக இருக்கும் போது பாடசாலைக்கு அழைத்து வருதல், பாடசாலையில் காத்திருத்தல், பாடசாலை விட்ட பிறகு வீட்டுக்கு அழைத்துச செல்லல், தமது பிள்ளைகளின் பாடசாலைத் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்தல் போன்றவற்றை சிறிய வயதில் செய்த போதும் பிள்ளைகள் வளர்ந்து வரும் போது அது படிப்படியாகக் கைவிடப்படுகிறது. ஆனால் இன்றைய நிலையைப் பார்க்கும் போது மாணவர்கள் சிறுவர்களாக இருக்கும் காலத்தை விட படிப்படியாக வளரும் போது முன்னரை விட அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே பிள்ளைகள் பெரிய வகுபபுகளுக்குச் செல்லும் போது மாணவர் நலனில் கூடுதல் அக்கறையெடுத்தல் மிக அவசியமானதாகும்.


Add new comment

Or log in with...