விளையாட்டுக்களை நீக்குவதற்கு நான் ஒருநாளும் அனுமதியேன்

தேசிய விளையாட்டு விழா

கடந்த காலங்களில் தேசிய விளையாட்டு விழாவில் இடம் பெற்ற சில விளையாட்டுப் பிரிவுளை நீக்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவ்விளையாட்டுக்களை நீக்குவதற்கு விளையாட்டு அமைச்சராக மட்டுமல்ல சாதாரண பிரஜையாகவும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழஹப்பெரும தெரிவித்துள்ளார். இவ்விளையாட்டு விழாவில் சில விளையாட்டுக்களை நீக்குவதற்கு பல்வேறு விளையாட்டுக் கழகங்களினால் யோசனைகள் முன் வைத்தாலும் நீக்குவதற்கு விளையாட்டு அமைச்சு இணங்கவில்லை என்று நேற்று முன்தினம் இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவன கேட்போர் கூடத்தில் (SLIDA) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

இவ்வருடம் நடைபெறவிருக்கும் தேசிய விளையாட்டு விழாவில் எல்லே, கரம், செஸ், ஸ்டான்டட் சைக்கிளோட்டம், மென்பந்து கிரிக்கெட் ஆகிய வினையாட்டுப் பிரிவுகளை நீக்குவது தொடர்பாக யோசனைகளை அமைச்சு மட்டத்தில் தீர்மானித்துள்ளதா என ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு மேற்கண்டவாறு அமைச்சர் பதிலளித்தார்.

“நாம் இவ்வாறான விளையாட்டுப் பிரிவுகளை நீக்குவதற்கு தீர்மானமெடுக்கவில்லை ஆனால் விளையாட்டுக் கழகங்களால் நீக்குவதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளன. இலங்கை கரம் அணியினர் உலக சம்பியன், இரண்டாவது இடம் என பல சாதனைகளை புரிந்துள்ளனர். அவ்வாறான ஒரு விளையாட்டை நீக்குவதென்பது பெரும் தவறாகும். எல்லே விளையாடடு கிராமத்து இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற விளையாட்டாகும். கொழும்பு நகர் தொடக்கம் புத்தளம் வரையுள்ள பகுதிகளில் எல்லே விளையாட்டு மிகவும் பிரபலமானது. செஸ் விளையாட்டு மட்டுமல்ல மற்றைய விளையாட்டுக்களும் இதே போன்ற ஜனரஞ்சகமான விளையாட்டுக்களாகும். தேசிய விளையாட்டு விழாவிலிருந்து மேற்படி பிரிவுகளை நீக்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

தேர்தலொன்று வரும் வரை குறுகிய கால அரசாங்கமொன்றில் விளையாட்டு அமைச்சரென்ற வகையில் அமைச்சின் இலக்கை அடைவது எப்படி என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்: ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆழமாகவும், சரியான முறையிலும் பிரச்சினைகளை அணுகும் தலைவர் என்ற வகையில் இக்குறுகிய காலத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். எனவே எதிர்காலத்தில் அமைச்சர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இக்குறுகிய காலத்தில் சரியான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தனது பொறுப்பாகும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சிலோ அல்லது விளையாட்டு கழகங்களிலோ யாரேனும் ஒரு நபர் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கு எத்தனித்தால் அது பற்றி விரிவாக கலந்துரையாட தான் தயாரென அவர் மேலும் தெரிவித்தார். கடந்த நல்லாட்சி அரசு 5 வருட காலத்தில் 5 விளையாட்டு அமைச்சர்களையும், அமைச்சின் கீழ் இயங்கும் சுகததாச விளையாட்டு அதிகாரசபைக்கு நான்கு தலைவர்களையும் நியமித்திருந்ததாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார். மிகவும் மோசமான நிர்வாகமொன்று இருந்துள்ளது. நிறையத் தவறுகள் நடைபெற்றுள்ளது. இதை நான் ஒருவர் மீதோ ஒரு நிறுவனத்தின் மீதோ குற்றம்சாட்டவில்லை. அரசியல் ரீதியாக தீர்மானங்களை எடுத்ததால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் முன்வைத்த டென்டர்கள் கூட இன்னும் அப்படியே கிடப்பில் உள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ரூபவாஹினி ஒளிபரப்பு சம்பந்தமான கடந்த காலங்களில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒளிபரப்பு சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களில் அமைச்சரின் பங்களிப்பு எவ்வாறு அமையும் என ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்: ‘இலங்கை கிரிக்கெட் ரூபாவாஹினி ஒளிபரப்பு சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களில் விளையாட்டு அமைச்சர் என்ற வகையில் சம்பந்தப்பட முடியாது. அமைச்சர் சம்பந்தப்பட்டால் அங்கு வேறு அர்த்தகங்கள் கற்பிக்கப்படும். அமைச்சர் என்ற வகையில் சட்டவிரோமான முறையில் ஏதாவது தவறுகள் நடைபெறுமானால் இலங்கை கிரிக்கெட்டோடு அமைச்சின் நிருவாக அதிகாரியை தலையிடச் செய்து அதை நிவர்த்திக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தேசிய, சர்வதேச கிரிக்கெட் வர்ணனை கிடைக்காமை சம்பந்தமாக கேட்கப்பட்ட போது அதை பற்றித் தேடிப்பார்பதாக அமைச்சர் பதிலளித்தார்.

தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி வீரர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். சில சிறந்த வீரர்கள் சமுர்த்தி கொடுப்பனவுகள் பெறும் குடும்பங்களின் பிள்ளைகள். அவர்களுக்கு பயிற்சிகளை அளிக்கும் ஒரு திட்டம் அவசியம். அவ்வாறான பிள்ளைகளுக்கு அனுசரணை வழங்கக் கூடியவர்களைத் தேடிக்கொடுத்து அவ்வாறான வீரர்களின் திறமையை வளர்ப்பதற்கு திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


Add new comment

Or log in with...