நால்வரையும் 23ஆம் திகதி தூக்கிலிட அனைத்தும் தயார்!

இனிமேல் உள்ள ஒரேயொரு இறுதி வாய்ப்பு கருணைமனு; குடியரசுத் தலைவர் நிராகரித்தால் குறித்த தினத்தில் காலையில் மரணதண்டனை நிறைவேற்றம்

டில்லி மாணவி நிர்பயா கொலையாளிகளின் இறுதி நாட்கள்  எண்ணப்படுகின்றன

டெல்லி பிசியோதெரபி மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிகள் 4 பேரையும் எதிர்வரும் 22-ம் திகதிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறையில் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.

கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை இவர்களுக்கான மரண தண்டனையை உறுதி செய்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் தண்டனை விபரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது..

பொதுவாக இந்தியாவில் மரண தண்டனை என்பது அரிதான ஒன்றுதான். கடைசியாக 2015இ-ல் மும்பை குண்டு வெடிப்பு கைதி யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டார். அதனால் இப்படி கைதிகளை தூக்கில் போடுவதற்கு என்று தனியாக எந்த சிறையிலும் ஊழியர்கள் நிரந்தரமாக இருப்பது இல்லை.

எப்போதாவது இப்படி யாரையாவது தூக்கில் போட நேர்ந்தால், தற்காலிக ஊழியர்களை அந்த நேரத்தில் மட்டும் கூப்பிட்டுக் கொள்வது வழக்கம். ஒரு சிலர் பரம்பரையாகவே இந்த வேலையை பார்த்து வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் திகார் சிறையில் இதற்கான ஊழியர்கள் இல்லை. ஆனால் மீரட் சிறையில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பவான் ஜலாத். இவரது குடும்பத்தினர் 4 தலைமுறையாகவே தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் என்ற போராட்ட வீரர்களை லாகூர் சிறையில் தூக்கில் போட்டதும், இந்த பவான் ஜலாத்தின் தாத்தா ஆவார். இப்போது பலான் ஜலாத் படுக்ைக விரிப்பு வியாபாரம் செய்து வருகிறார். சைக்கிளில்தான் படுக்ைக விரிப்புகளை கட்டி எடுத்துக் கொண்டு போய் விற்று வருகிறார். மாணவி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட வேண்டி வரும் என்று ஏற்கனவே மீரட் சிறைச்சாலை நிர்வாகத்தினர் ஜலாத்திடம் சொல்லி இருந்தார்கள்.

இப்போது தண்டனை உறுதியான நிலையில், உடனடியாக ஜலாத்துக்கு தகவலை தெரிவித்துள்ளனர். எனினும் முறைப்படி சிறை நிர்வாகம் கடிதமும் அனுப்பும் எனத் தெரிகிறது. தூக்கில் போடுவதை பற்றி ஜலாத்திடம் கேட்டால் "4 பேரையும் தூக்கில் போடும் இந்த வேலையை செய்ய நான் தயாராக இருக்கிறேன். இந்த மாதிரி கொடிய குற்றவாளிகளை கொல்வதன் மூலம் சமுதாயத்துக்கு அழுத்தமான ஒரு செய்தியை சொல்வதாக இருக்கும். ரொம்பவும் கீழ்த்தரமான வேலையை இந்த 4 பேரும் செய்திருக்கிறார்கள். மரண தண்டனையை நிறைவேற்றினால், அதன் மூலம் நிர்பயா குடும்பதினருக்கும், பொதுமக்களுக்கும் ஒரு ஆறுதலாவது கிடைக்கும். அதனால் இந்தப் பணியை நிறைவேற்ற நான் தயார்.

தூக்கில் போட ஏற்பாடு செய்ய எப்படியும் 2, 3 மணி நேரம் ஆகும்.அந்தத் தூக்குக் கயிறு வலுவாக இருக்கிறதா? தூக்கு மேடை சரியாக இருக்கிறதா? இதெல்லாம் பார்க்க வேண்டும். மற்றும்படி இந்த மாதிரி ஆட்களை தூக்கில் போட எனக்கு மனதில் எந்த வருத்தமும் துளியும் இல்லை" என்றார் அவர்.

இருந்தாலும் இதுவரை ஜலாத் யாரையுமே தூக்கில் போட்டதில்லை. 4 வருஷத்துக்கு முன்பு நிதாரி கொலை வழக்கு சம்பந்தமாக தூக்கில் போட கூப்பிட்டார்களாம். ஆனால் அதற்குள் அந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டார்கள். நிர்பயா குற்றவாளிகள்தான் ஜலாத்தின் முதல் தூக்கு. இப்படி 'ஹேங்மேன்' முதல் கயிறு வரை ஏற்பாடுகள் அனைத்தும் திகார் சிறையில் பரபரப்புடன் நடந்து வருகின்றன.

டெல்லியில் மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான அதிகாரபூர்வ ஆணையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழங்கியுள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிர்பயா வழக்கின் முடிவாக இது கருதப்படுகிறது.

எனினும், இந்த திகதிக்கு முன்னதாக குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறானால் குடியரசுத் தலைவரின் முடிவு வரும் வரை தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்படும்.

தூக்குத் தண்டனை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து என்ன நடைமுறை பின்பற்றப்படும்? ஜனவரி 22ஆம் திகதி குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா?

இது குறித்து மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

"தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள், தண்டனை நாளுக்குள் அரசமைப்பு சட்டப் பிரிவு 72bன் கீழ், ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். குற்றவாளிகள் டெல்லி என்பதால் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய முடியும்.

அதற்குப் பிறகு, தண்டனைக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் வேண்டும். அதாவது குடியரசுத் தலைவர் முன்பு கருணை மனு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க அதில் கோரிக்கை விடுக்கப்படும். கருணை மனு நிலுவையில் இருந்தால் பெரும்பாலும் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிக்கும்" என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன். ஒருவேளை கருணை மனு நிராகரிக்கப்பட்டால், குறிப்பிட்ட திகதியில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்.

அதேசமயம், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கு சிறை கையேட்டில் உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும். எங்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதோ அந்தச் சிறையில் இதற்கான வசதிகள் செய்யப்படும்.

குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த ஆவணங்களை சிறை அதிகாரிகள் குற்றவாளியிடம் காண்பிக்க வேண்டும்.

சரியாக ஒரு நாள் முன்பு குற்றவாளிகளின் கடைசி ஆசை குறித்து கேட்கப்படும். மேலும் அவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனும் பரிசோதனை செய்யப்படும். ஏனெனில், தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு குற்றவாளிகளின் உடல் மற்றும் மனநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அத்தோடு குற்றவாளிகள் அவர்களது குடும்பங்களைச் சந்திக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பிறகே, குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்" என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...