தேசிய பிரச்சினை: ஜனாதிபதி சிறந்த தீர்வை பெற்றுத் தருவார்

சபையில் சம்பந்தன் நம்பிக்ைக

தேசிய பிரச்சினைக்கு சிறந்த அரசியல் தீர்வு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுத் தருவாரென்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் உண்மையையே பேசுகிறார். அவர் மீது எமக்கு நம்பிக்கை உண்டு. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும்போது அவருடன் இணைந்து நாம் செயற்பட முடியும் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 56 ஆம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக தமது அபிலாசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த  வகையில் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாட்டை காண்பது அவசியமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

பிளவுபடாத நாட்டில் அதிகாரப்பகிர்வு என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக பேசப்பட்டு வருகிறது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க ஜே. ஆர் ஜெயவர்தன போன்றோர் அரசிலமைப்பு செயற்பாடுகளில் அக்கறை காட்டி வந்தனர். அதனை தொடர்ந்து அதற்கு பின்னர் வந்த அரசியல் தலைவர்களும் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இதுவிடயத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுக்கு வரவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவர் சர்வ கட்சி மாநாடு ஒன்றைக் கூட்டி நாட்டின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டும் என்பதில் இணக்கம் தெரிவித்திருந்தார். அப்போது சர்வதேசத்தின் ஆதரவுடன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென இணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அதிகார பரவலாக்கல் அவசியமாகும். மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். பெரும்பான்மை இன மக்களின் இணக்கப்பாட்டுடன் சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இது தொடர்பில் அன்று அந்த அந்த சர்வ கட்சி மாநாட்டிலும் பேசப்பட்டது.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கொள்கையை கட்டியெழுப்புவது அவசியம். நாட்டில் பல்வேறு தரப்பினரும் பல அரசியல் நோக்கம் உடையவர்களாகவுள்ளனர்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பு கடந்த காலங்களில் எமக்கு கிடைத்துள்ளது அதனாலேயே புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

புலிகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெரும் பிரச்சினையாக காணப்பட்டனர். அதற்கிணங்க இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் பங்களிப்புடனேயே புலிகளை தோற்கடிக்க முடிந்தது. அந்த பங்களிப்பு மதிக்கப்பட வேண்டும்.

நாட்டில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை சகல மக்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...