சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

சமய நல்லிணக்கத்தைப் பேணுதல்

இணையவழி தவறுகளை தடுத்தல்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

ஜனாதிபதியும் அமைச்சர் சண்முகமும் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப்

பாதுகாப்பு, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வெறுப்புப் பேச்சு, இணைய வழியாக தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றிற்குத் தீர்வு காணுதல் மற்றும் சமய நல்லிணக்கத்தைப் பேணுதல் தொடர்பாக சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். வர்த்தக அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த தரவு முகாமைத்துவத்தை வர்த்தகத் துறைகள் அதிகளவில் நம்பியிருக்கும் சமூக ஊடக புலனாய்வு மாதிரிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் மற்றும் ஆளடையாளத் தரவுகள் (பயோமெட்ரிக்) ஆகிய இரு துறைகளையும் இணைக்கும் மறுக்கமுடியாத அடையாளமாக சிங்கப்பூர் தற்போது ஆராய்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் சண்முகத்திற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பகற் போசன விருந்தளித்தார். அதன் பின்னர் அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.


Add new comment

Or log in with...