மு.கா., ம.கா. கட்சி தலைவர்களை ஆளும், எதிர்த் தரப்பு நிராகரிப்பு | தினகரன்

மு.கா., ம.கா. கட்சி தலைவர்களை ஆளும், எதிர்த் தரப்பு நிராகரிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களையும் ஆளும் தரப்பு மட்டுமன்றி எதிர்த் தரப்பினரும் நிராகரித்துள்ளதாக  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். 

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாவடிப்பள்ளி பிரதேச மத்திய குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு  நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் எதற்காக  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தாரோ அந்த நோக்கம் மறக்கடிக்கப்பட்ட நிலையில், இன்று அக் கட்சி பெரும் முதலீட்டு நிறுவனமாக மாற்றம் பெற்றுள்ளது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பு   உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு பல மாவட்டங்களிலும் ஆசனங்களை பெற்று சாதித்து உள்ளது. குறிப்பாக கொழும்பு மாநகர சபையில் இரண்டு ஆசனங்களை பெற்று ள்ளோம். அம்பாறையில்  மயில் சின்னத்தில் கூட்டமைப்பாக போட்டியிட்டு ஹக்கீமுக்கு தேர்தல் மூலமான முதலாவது படிப்பினையை ஊட்டினோம். 

ஆனால் துரதிஷ்டவசமாக இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பு தேசிய அரசியலில் அந்த இரண்டு முஸ்லிம் கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் பயணிக்க செய்தது. அவர்களின் தேர்தல் கால மேடை பேச்சுகள்கூட தலைமைத்துவ பண்புகளை பிரதிபலிக்கவில்லை.

அம்பாறை மாவட்ட மக்கள் இம்முறை ஏமாறவே மாட்டார்கள் என்று திடமாக நம்புகின்றேன். 

தோல்வி கண்ட அரசியல் தரகர்கள் 12.5வீத வெட்டுப்புள்ளி மசோதாவை வைத்து அரசியல் செய்ய தற்போது முனைகின்றனர். தலைவர் அஷ்ரப் அன்று அதை அவரின் ஆளுமையால் 05வீத வெட்டு புள்ளியாக கொண்டு வந்து அதன் மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்த முயன்றார். ஆனால் இன்றைய நிலையில் கூட முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிரதிநிதித்துவங்களை பெறுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் வடக்கு, கிழக்கு வெளியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகவே பெரும்பாலும் உள்ளது. 

தலைவரின் சிந்தனையில் பயணிக்கும் நாம் நிதானமாக முடிவெடுத்து  மொட்டு கட்சியுடன் எழுத்து மூல ஒப்பந்தம் செய்துள்ளோம். 

எமது ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டுமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில்  பொதுஜன பெரமுனவை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்றார். 

(ஒலுவில் விசேட நிருபர்)   


Add new comment

Or log in with...