தேச நலனுக்காக உழைத்த தலைவர் பண்டாரநாயக்க

இங்கிலாந்தில் கல்வி கற்ற போதிலும், தாயகத்தின் கலாசார பாரம்பரியத்தை விட்டு நீங்காத தலைவர்

121வது பிறந்த தினம் இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் 121 ஜனன தினம் (08.01.2020) இன்றாகும்.

இலங்கை 1505 முதல் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கு சுமார் 445 வருடங்கள் உட்பட்டிருந்தது. இக்காலப் பகுதியில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் சுரண்டுதல்களுக்கும் உள்ளாகினர். அதற்கு எதிரான போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் உள்நாட்டு மக்கள் அவ்வப்போது முன்னெடுத்த போதிலும் அவை கொடுங்கரங்கள் கொண்டு அடக்கப்பட்டன.

இவ்வாறான சூழலில் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கு சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்த எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பிரித்தானியாவில் கல்வி கற்றவராக இருந்த போதிலும், அவர் தாய்நாட்டின் விடுதலையிலும் மக்களின் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி ஆற்றிய சேவைகள் இந்நாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன.

கம்பஹா மாவட்டத்திலுள்ள கொரகொல்ல வளவ்வவில் செல்வச் செழிப்பு மிக்க சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவுக்கும் டயசி எஸ்லின் ஒபேசேகரவுக்கும் மகனாக 1899.01.08 அன்று பண்டாரநாயக்கா பிறந்தார். அவரது தாயார் அன்றைய அரச பேரவை உறுப்பினரான சேர் சொலமன் கிறிஸ்டோபல் ஒபேசேகரவின் மகளாவார். வீட்டிலேயே பாலர் கல்வியைப் பெற்றுக் கொண்ட பண்டாரநாயக்கா, முகத்துவாரம் சென் தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்றதோடு கேம்பிரிஜ் பல்கலைக்கழக சிரேஷ்ட பரீட்சையில் ஆங்கிலம், லத்தீன், கிரேக்க மொழிகளிலும் சிறப்பாக சித்தியடைந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்று சட்டத்தரணியாகவும் பரிஸ்டர் பட்டம் பெற்றவராகவும் வெளியேறினார்.

1925 இல் நாடு திரும்பிய இவர், தீவிர அரசியலில் கவனம் செலுத்தினார். அச்சயம் நாடு பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இந்நிலையில் இவர் நிட்டம்புவ கிராம குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்றைய காலகட்டத்தில் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த அமைப்பான இலங்கை தேசிய சங்கத்தின் செயலாளராகவும் இவர் நியமனம் பெற்றார். இந்தச் சூழலில் கொழும்பு மாநாகர சபைக்கான தேர்தலில் மருதானை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு செயற்பாட்டு அரசியலில் பிரவேசித்த இவர், 1930 இல் வெயாங்கொட தொகுதியில் போட்டியிட்டு அரச பேரவை உறுப்பினரானார்.

அதேநேரம், சிங்கள மக்களின் கலாசார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு 1936 இல் இவர் சிங்கள மகா சபையை அமைத்தார். அதன் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார். 1940களாகும் போது ஸ்ரீமாவோவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் பிரவேசித்த இவர் , இரண்டு பெண் குழந்தைகளதும் ஒரு ஆண் குழந்தையினதும் தந்தையானார்.

இலங்கை சுதந்திரச் சட்டத்தை 1945 இல் இவர் அரச பேரவையில் சமர்ப்பித்தார். இக்காலப் பகுதியில் அரச பேரவை உறுப்பினராக பதவி வகித்த டி.எம். ராஜபக்ஷவின் திடீர் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கான இடைத்தேர்தலில் அவரது சகோதரரான டி.ஏ. ராஜபக்ஷ போட்டியின்றி தெரிவானார். இதன் ஊடாக பண்டாரநாயக்காவுக்கும் டி.ஏ. ராஜபக்ஷவுக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டது.

இவ்வாறான சூழலில் 1946 இல் டி.எஸ். சேனநாயக்கா சிங்கள மகா சபை, அகில இலங்கை முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல அமைப்புக்களையும் தமிழ், முஸ்லிம், சிங்கள பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்தாபித்தார். சோல்பரி அரசியலமைப்பின் கீழ் 1947 இல் நடந்த தேர்தலில் போட்டியிடுவதை நோக்காகக் கொண்டே இக்கட்சி அமைக்கப்பட்டது. அந்த வகையில் பண்டாரநயக்கா அத்தனகல்லவிலும், டி.ஏ. ராஜபக்ஷ பெலியத்தவிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி பண்டாரநாயக்காவுக்கு பாராளுமன்றத்தில் சபை முதல்வர் பதவியும் உள்ளூராட்சி சுகாதார அமைச்சு பதவியும் வழங்கப்பட்டன.

இதேவேளை இந்நாட்டுக்கு 1948 இல் டொமியன் அந்தஸ்து சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் பிரித்தானிய நிர்வாக முறையே தொடர்ந்தும் நிலவியது. ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பில் மக்களுக்கு சேவையாற்றுவது சிரமமான காரியமாக விளங்கியது. நாட்டின் வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் சுதந்திரமாக இடம்பெற்றாலும் வெளிநாட்டவர்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவை காணப்பட்டன. அது சுயமாக முன்னேற்றமடைவதற்கு பெரும் தடைக்கல்லாக விளங்கியது.

இந்நிலையை மாற்றியமைப்பதற்கு பண்டாரநாயக்கா, டி.ஏ. ராஜபக்ஷ போன்றோர் ஐ.தே.க ஆட்சியிலிருந்தபடி முயற்சி செய்த போதிலும் அது சரிவரவில்லை. இந்நிலையில் நாட்டுக்கு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதையும் நாட்டை தனித்துவத்துடன் கட்டியெழுப்புவதையும் நோக்காகக் கொண்டு ஐ.தே.க வின் அமைச்சர் மற்றும் சபை முதல்வர் பதவிகளை துறந்து 1951.07.12 அன்று பண்டாரநாயக்கா எதிரணிக்கு செல்ல அவருடன் டி.ஏ. ராஜபக்ஷவும் இணைந்து சென்றார்.

பண்டாரநாயக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கை இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. ஐ.தே.க அரசிலிருந்து வெளியேறிய பண்டாராநாயக்கா, டீ.ஏ. ராஜபக்ஷ உள்ளிட்டோர் இரவு பகலாக உழைத்து நாடெங்கிலும் பயணங்களை மேற்கொண்டு 1951.09.02 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்தனர். இக்கட்சியை அமைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட முக்கியஸ்தர்களின் கையெழுத்துடனான அழைப்பில் எல்லா இன, மதங்களையும் சேர்ந்த 44 பேர் கையெழுத்திட்டிருந்தனர். அவர்களில் மூன்று தமிழர்களும் ஐந்து முஸ்லிம்களும் இடம்பெற்றிருந்தனர். இவ்வாறு கையெழுத்திட்டிருந்தவர்களில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஏ.ரி. கரீம், எஸ். தங்கராசா, ஏ.எம். மாகார், சீ.ஏ.எஸ். மரிக்கார், ஏ.சி மரிக்கார், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

கட்சி அமைக்கும் கூட்டத்தில் கட்சியின் பெயரை எச். ஸ்ரீ நிஸங்க முன்மொழிய அதனை கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் வழிமொழிந்தார். இக்கட்சியின் தலைவராக எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட பேர்னாரட் அலுவிகார, பதியுத்தீன் மஹ்மூத், எஸ். தங்கராசா ஆகியோர் இணைச்செயலாளர்களாக நியமனமாகினர். அதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் ஸ்ரீ.ல.சு. கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான சூழலில் 1952.03.21 அன்று அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க திடீரென நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க போட்டியிட்டு 09 ஆசனங்களை வெற்றி பெற்றது. அவர்களில் பண்டாரநாயக்காவும் டி.ஏ ராஜபக்ஷவும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களில் பண்டாரநாயக்கா எதிர்க்கட்சித் தலைவரானார்.

இதனைத் தொடர்ந்து கட்சியைப் பரவலாக்கும் நடவடிக்கைகள் பரந்தடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான சூழலில் இடதுசாரிகள் 1953 இல் ஹர்த்தாலை முன்னெடுத்தனர். அதனால் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கா பதவியை இழந்தார். ஆனாலும் பண்டாரநாயக்க 'பஞ்சமகா பலவேகய' திட்டத்தை முன்னெடுத்தார்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட 1956 பொதுத்தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க நான்கு இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அத்தேர்தலில் இக்கூட்டணி வெற்றிபெற்றதோடு 1956 ஏப்ரலில் பண்டாரநாயக்கா பிரதமரானார்.

இவர் தம் பதவிக்காலத்தில் நீர்கொழும்பு மற்றும் சீனக்குடாவில் இருந்த பிரித்தானிய விமானப்படைத் தளங்களையும், திருகோணமலையிலிருந்த கடற்படைத்தளத்தையும் வெளியேற்றினார். தனியார் பஸ் வண்டிகளையும் துறைமுகங்களையும் அரசு​ைடமையாக்கினார். சிங்களம் மட்டும் சட்டம் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு ஜே.ஆர். ஜயவர்தன அங்கீகாரமும் அளித்தார். தமிழ்மொழிகள் விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை நிறைவேற்றிய பண்டாரநாயக்கா, மே தினத்தைப் பொதுவிடுமுறை தினமாக்கினார். சிறுபான்மையினரின் பிரச்சினைகளது தீர்வுக்காக பண்டா_செல்வா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். ஆனால் அதற்கு எதிராக ஜே.ஆர் தலைமையில் கண்டிக்கு ஐ.தே.வினர் ஊர்வலம் நடத்தினர்.

அணிசேராக் கொள்கையை வெளிநாட்டு கொள்கையாக எடுத்துக்கொண்ட பண்டாரநாயக்க, கம்யூனிஸ நாடுகளான சீனா, ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டார். குறிப்பாக அன்றைய எகிப்து ஜனாதிபதி நாசருடன் நெருங்கி செயற்பட்ட இவர், எகிப்து சுயஸ் கால்வாயை தேசிய மயமாக்கும் நடவடிக்கைக்கு இஸ்ரேலுக்கும் பிரித்தானியாவுக்கும் எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவளித்தார். சுயேஸ் கால்வாய் ஆலோசனைக்குழு உறுப்பினராக இலங்கையும் நியமிக்கப்பட்டது.

இவ்வாறு நாட்டுக்கு அளப்பரிய சேவைகள் செய்த பண்டாரநாயக்க துரதிஷ்டவசமாக 1959.09.26 அன்று தல்துவ சோமராம தேரரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தார்.அவர் மறைந்து 60 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றும் அவர் நினைவு கூரப்படுகிறார்.


Add new comment

Or log in with...