முரண்பாடு மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கிடையிலும் இருந்தது

முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் பா. அரியநேத்திரன்

முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கிடையிலும் இருந்தது. அப்படியாயின் அரசியல் கட்சிகளிடையே இருப்பது ஆச்சரியம் இல்லை என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை கடல்கடந்த உறவுகள் அமைப்பின் ஓராண்டு அகவை விழாவினை முன்னிட்டு முதியோர்களையும் மாணவர்களையும் பாராட்டும் நிகழ்வு, அமைப்பின் தலைவர் சி.ரூபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கணவன் மனைவிக்கிடையே, சமூக அமைப்புகளிடையே, அரச செயலக அலுவலகங்களிடையே அமைச்சர்களிடையே, அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமைகள் இருந்ததாக வரலாறுகள் இல்லை. அப்படி கருத்தொற்றுமைகள் இருக்குமானால் நல்லவை தீயவை எது என்பதை ஆராய்ந்து அறியும் மனநிலை மனிதருக்கு இல்லாமல் போயிருக்கும்.

தெய்வங்கள் மத்தியிலும் கருத்தொற்றுமை இருந்ததில்லை. இதற்கு நல்ல உதாரணம் சிவனும் பார்வதியும் தனது புதல்வர்களான விநாயப்பெருமானையும் முருகப்பெருமானையும் அழைத்து உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கு பரிசாக மாம்பழம் தருவோம் என்றார்கள்.

அப்போது உலகம் தாயும் தந்தையும்தான் என சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்தார் விநாயகர். அவர் பரிசாக மாம்பழத்தை பெற்றார் ஆனால் முருகப்பெருமான் மயில்மேல் ஏறி பறந்து உலகம் முழுவதையும் வலம் வந்தார்.

இதில் நாம் பார்க்க வேண்டிய விடயம் கடவுளாக உள்ள விநாயகருக்கும் முருகனுக்கும் கருத்தொற்றுமையோ செயல் ஒற்றுமையோ இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இருவருமே உலகத்தை சுற்றும் போட்டியில் ஒரு செயல்பாட்டு முறையை முன் எடுத்திருப்பார்கள். தாயும் தந்தையும் உலகம் என்ற உன்னத சிந்தனை அண்ணனான பிள்ளையாருக்கு இருக்கும்போது தம்பியான முருகப்பெருமானுக்கு ஏன் வரவில்லை என்று நாம் ஆழமாக சிந்திப்போமானால் எந்த விடயத்திலும் ஒத்த கருத்து நிலை சகோதரர்களுக்கும் இருக்காது கடவுளுக்கும் இருக்காது. இப்படித்தான் மனித வாழ்கையிலும் எல்லா விடயங்களும் ஒத்த கருத்துடன் செயல்படுவதில்லை. தற்போது பலர் கூறும் விடயம் தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை தமிழ்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை, ஒரு கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்கிறார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் விரல் நீட்டி கருத்தொற்றுமைகள் இல்லையென்று விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதற்கான பதில் இதுதான் கடவுள் இடத்திலும் கருத்தொற்றுமை இருக்காத போது கடவுளர்களான சகோதர்களிடையே ஒற்றுமை இல்லாதபோது எப்படி கட்சிக்குள் மட்டும் கருத்தொற்றுமை வரும்.

மண்டூர் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...