நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் 3 - 0 என ஆஸி கைப்பற்றியது

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி,279 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, அவுஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

அத்தோடு, ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற இத்தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம், 120 புள்ளிகளையும் அவுஸ்திரேலியா பெற்றுக் கொண்டது.

சிட்னி மைதானத்தில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 454 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சகன் 215 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 63 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில், கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டொட் ஆஸ்ட்ல் 2 விக்கெட்டுகளையும், மெட் ஹென்ரி மற்றும் வில்லியம் சோமர்வில் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 256 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களையும், டொம் லதம் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில், நதன் லயன் 5 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 198 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, போட்டியினை இடைநிறுத்திக் கொண்டது.

இதனால் நியூசிலாந்து அணிக்கு 416 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அவுஸ்திரேலிய அணி சார்பில், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களையும், ஜோ பர்ன்ஸ் 40 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சகன் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி மற்றும் டொட் ஆஸ்ட்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

416 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 136 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கொலின் டி கிராண்ட்ஹோமி 52 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில், நாதன் லியோன் 5 விக்கெட்டுகளையும், மிட்லெ; ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாவும், தொடரின் நாயகனாகவும் அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சகன் தெரிவு செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...