இயேசுவின் திருமுழுக்கு திருவிழா

மீட்பரை எதிர்நோக்கியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே’ என்று பரலோக தந்தையால் உணர்த்தப்பட்டு, திருமுழுக்கு யோவானால் திருமுழுக்கு அருளப்பட்ட இயேசுவின் திருமுழுக்கு திருவிழா எதிர்வரும் ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது.

இறைமகனாக இருந்தாலும் இறைபணியை தொடங்கும் முன் மனிதரோடு மனிதராக நின்று திருமுழுக்கு பெறுகிறார் இயேசு கிறிஸ்து. தூய ஆவியைப் பெற்று பணி வாழ்வுக்கு தம்மை தயார் படுத்துகிறார். நாமும் நம் வாழ்வின் எண்ணங்களை தூய ஆவியின் துணையோடு செயல்களாக்கும்போது அவை இறைவனுக்கு பிரியமான செயல்களாக இருக்கும். இயேசுவின் திருமுழுக்கு அனுபவத்தை நாமும் பெற்றால்தான் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டும் பிள்ளைகளாக இவ்வுலகில் வாழமுடியும்.

பிற இனத்தாருக்கு ஒளியாகவும், அமைதி ஏற்படுத்துபவராகவும் திகழ்ந்து, ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும் வார்த்தைகளை வழங்குகிறது எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகள். “இதோ தலைவராகிய ஆண்டவர் ஆற்றலோடு வருகிறார், ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார்” என்று இயேசுவின் ஆட்சி இறைவாக்கினர் வாயிலாக முன்மொழியப்பட்டுள்ளது.

இறைவனின் வருகை அனைத்து ஆசீர்வாதங்களையும் அள்ளித் தரும். கோணலானவை நேராக்கப்பட்டு, அனைவருக்கும் சமமாக பங்கிடப்படும் என்றும் ஆசீர்வாதங்களை பெற்று விட்டோம் என்றும் விசுவாசிப்போம்.


Add new comment

Or log in with...