தமிழ் மொழி தேசிய கீதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது

தமிழ் மொழி தேசிய கீதத்தை முன்னிலைப்படுத்தி எவரும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். சதாசிவம் தெரிவித்துள்ளார்.  

நுவரெலியா காரியாலயத்தில் நேற்று முன்தினம் (4) சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இதுவரையிலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை எவரும் தடைசெய்யவில்லை. ஒரு சில இனவாத அரசியல்வாதிகள் இதனை பயன்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றி திசை திருப்பி தங்களது அரசியலை முன்னெடுத்து செல்ல முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளின் வார்த்தைகளை நம்ப வேண்டாம்.  

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களாகின்றன. அதற்கிடையில் அரசாங்கத்தின் மீது வீண் பழி சுமத்தி அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்திற்கு பங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள். இந்த அரசாங்கம் மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கான புதிய அபிவிருத்தி செயல் திட்டங்களை செயல்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றது.  

இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல திட்டங்களுக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஒரு சில இனவாத அரசியல் வாதிகள் மக்களிடையே வதந்திகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தினார்கள்.

இதனால் இந்நாட்டில் வாழும் மக்கள் ஒற்றுமை இல்லாமல் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.

மீண்டும் நாட்டில் ஒரு இன பிளவுகளை ஏற்படுத்த எவரும் முயற்சி செய்ய கூடாது என்றார்.

தலவாக்கலை குறூப் நிருபர்   


Add new comment

Or log in with...