மூணு ஈச்சம் பழங்கள்

'பாங்கு சொல்ற நேரமாச்சு பேரீச்சம் பழத்த எடு புள்ள' 

குழந்தையின் கையில் ஒரு பழம் மட்டுமே இருந்தது. அவள் நழுவவிட்ட பழங்களை நான் வைத்திருக்கிறேன். இப்பொழுதே சென்று பழங்களை கொடுப்போம், இவர்களுடனே நோன்பினை திறப்போம், பாங்கு சொல்ல இன்னும் ஐந்து நிமிடம் உள்ளது, சற்று பொறுத்து என்ன சங்கதி நடக்குது என்று பார்ப்போம், ஆர்வத்தில் எனது கால் இடம் விட்டு நகராமல் நின்றது. 

'என்ன புள்ள ஒரு பழந்தான் இரிக்கி' 

'ஒரு பழமா?' 

'கடக்காரன் ஒரு பழம்தான் தந்தானா? 

நான் பத்துருவாக் காசி தந்தருவா மூணு பழம் வந்திருக்கணுமே?' 

'இல்லம்மா மூனு பழந்தான் வாங்கினேன்  

எனக்கு நெனப்பு இரிக்கி' 

'இல்ல புள்ள இஞ்ச ஒரு பழந்தான் இரிக்கி பாரு' 

'மழ பெய்ஞ்சதால ஓடி வந்தெனா ரோட்டில உழுந்திட்டாக்கும்மா....' 

'மூனு ஈச்சம் பழத்தால நோன்பு தொறக்கிறது நபியவங்கட சுன்னத்து 

இப்ப ஒன்னுதான் இரிக்கி என்ன செய்றது புள்ள?... சுன்னத்தை கடப்பிடிக்காட்டி பாவமாயிடும்' 

இனியும் தாமதிக்க கூடாது, பழங்களை கொண்டு கொடுப்போம் இல்லையேல் மனிதம் செத்துவிடும். வறுமையின் கோர ஆட்டம் இவ்வளவு பயங்கரமானதா? ரமழான் காலங்களில் மலிவாக காணப்படும் பேரீத்தம் பழங்கள் கூட இல்லாமல் வாழ்வு நகர்கிறதா? உள்ளே செல்வோம் பாங்கு சொல்வதற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் உள்ளன. அதற்குள் முந்திக் கொண்டாள் குழந்தை. 

'உம்மா இரிக்கிர ஒரு ஈச்சம் பழத்த ஆறு துண்டா பிய்ச்சி நான் மூணும் 

நீங்க மூனும் எடுத்து சாப்புடுவோம், நபிகளாரின் சுன்னத்த காப்பாத்திடலாம்' 

என் கையில் இருந்த பேரீத்தம் பழங்களின் சாறுகள் மழை நீரோடு வழிந்து பெரும் வெள்ளமாக ஊற்றெடுக்கத் தொடங்கியது.


Add new comment

Or log in with...