ரசனையை பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கினை கலை, இலக்கிய நிகழ்வுகள்தான் வளர்க்கின்றன

கலை,கலாசாரம், இலக்கியம் போன்ற விடயங்கள் எமது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ளன. இலக்கியம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை தருகிறது என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவரும் பேராசிரியருமான றமீஸ் அப்துல்லாஹ் தெரிவித்தார். கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கலாசார அதிகார சபை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பிரதேச கலை இலக்கிய விழா பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் இதனை தெரிவித்தார்.  

தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

கலாசார நிகழ்வுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறுவது அந்த சமூகத்தின் கலாசார விழுமியங்கள் அழிந்து போவதிலிருந்து பாதுகாக்கின்றன. நாம் நமது சமூகத்திற்கு மத்தியில் வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பினை அரசாங்கம் செய்து தருகின்றது.  

இலக்கியம் என்பது மனிதன் மகிழ்வாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு அம்சமாகும். இலக்கியத்தை வாசிப்பதன் மூலம் பயன்பெறுவது மாத்திரமன்றி மனதிற்கு சுகத்தினையும் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தையும் தருகின்றன. இதனை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மற்றவரை பாராட்டுகின்ற, ரசனையை பகிர்ந்து கொள்வதற்கான மனப்பாங்கினை இலக்கியம், கலாசார நிகழ்வுகள்தான் வளர்க்கின்றன. இன்று பிள்ளைகள் மத்தியில் தோல்வியை தாங்கிக் கொள்கின்ற மனப்பாங்கு இல்லாமல் போய்விட்டது.  

இதற்கு பிரதான காரணம் எமது பிள்ளைகள் விளையாடுவதில்லை. பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடாவது விளையாடுவதற்கு நாம் அனுமதிப்பதில்லை. இதனால் பிள்ளைகள் வெற்றி தோல்வியை தாங்கிக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இவைகள்தான் தற்கொலைவரைக்கும் எமது பிள்ளைகளை எடுத்துச்செல்கிறது.  

பிள்ளைகள் அழுதால்கூட ஸ்மாட் போனை கொடுத்து விட்டு தொடர்ந்தும் நாடகம் பார்க்கின்ற பணியைத்தான் எமது தாய்மார் செய்கிறார்கள். பிள்ளைகளை தூங்கவைக்கும் போது எத்தனை தாய்மார் தாலாட்டுப்பாடல் பாடி பிள்ளைகளை தூங்க வைக்கிறார்கள். 

கலை,கலாசாரம், இலக்கியம் போன்ற விடயங்கள் எமது வாழ்கையோடு பிண்ணிப்பிணைந்துள்ளன. ஏனைய கல்விகள், பட்டங்கள் நிலைத்து நிற்பதில்லை. அவைகள் எமது அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச் செல்ல இலக்கியங்கள் தேவைப்படுகின்றன. இவைகள் தான் எமது ஆளுமைகளை வளர்க்கின்றன.  இலக்கியம் எமது சமூகத்தையும் சமூகம்சார்ந்த கலாசாரத்தையும் பாதுகாக்கின்றன. நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மெசிநெறி வாழ்க்கை முறைக்குள் இருந்து வெளியில்வரவேண்டும். இதற்கு இது போன்ற கலாசார விழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.  

நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான் உட்பட பிரதேச கலைஞர்கள் பலரும் பங்குபற்றினர்.கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.  

ஏ.எல்.எம்.ஷினாஸ்
(படங்கள்: பெரியநீலாவணை விசேட நிருபர்)  


Add new comment

Or log in with...