செயற்திறன், நிபுணத்துவம் மிக்க அரச சேவை அவசியம்

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரித்திருக்கின்றார். அவ்வாறானவர்கள் எத்தகைய தரத்தில் இருந்தாலும் அவர்கள் விடயத்தில் தயவு தாட்சண்யம் காட்டப்படாது தண்டிக்கப்படுவார்கள் எனவும் சேவை நீக்கம் செய்யப்படுவர் எனவும் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். ஜனநாயக நாட்டில் உழல் மோசடிகளில் ஈடுபடுவோர் தேசத்துரோகிகளாக காணப்படுவர். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது. இதுதான் ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படுவதற்கு ஒரே தீர்வாக அமைய முடியும். எமது நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. கட்டாயமாக இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

அரச சேவையை செயற்றிறன் மிக்கதாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்பதை உணர்ந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார். நாட்டு மக்கள் நிச்சயம் இதனை வரவேற்கவே செய்வர். இதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை கொண்டு வரவும் ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார். இலஞ்சம், ஊழல் மோசடிகளால் நாட்டின் சீரான இயங்கு நிலை தடம் மாறி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து அரசுகளும் இந்தச் சவாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆட்சி நிருவாகங்கள் ஆட்டம் கண்டே வந்ததை கண்கூடாக பார்க்க முடிகிறது.

போக்குவரத்து அமைச்சு, மோட்டார் போக்குவரத்து திணைக்கள உயரதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி தனது இந்த நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். அனைத்து அரச சேவைளும் மக்களுக்கு இலகுவாகவும் செயற்திறன் மிக்கதாகவும் அமைய வேண்டும். அரச சேவையில் ஊழல்களும் மோசடிகளும் தாமதங்களும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். தர்மத்தின் அடிப்படையில் பார்க்கின்ற போது இலஞ்சம் வாங்குவதும், இலஞ்சம் கொடுப்பதும் பெரும்பாவச் செயல் என்பதை மறந்துவிடக் கூடாது என்பதை ஜனாதிபதி சுட்டிக் காட்டி இங்கு அறப்போதனையொன்றையே நிகழ்த்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அதிரடி நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். நாட்டில் முறைகேடுகள் இடம்பெறுவதை நாட்டுத் தலைவரால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கவியலாது. தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதோடு நின்று விடாமல் அவற்றைத் தடுக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் கடப்பாட்டை நாட்டுத் தலைவர் கொண்டிருக்கின்றார். இதுதான் சிறந்த தலைமைத்துவத்தின் கடப்பாடாகும். உண்மையிலேயே ஜனாதிபதியின் இந்த மனவலிமை மெச்சப்பட வேண்டியதொன்றாகும், இதுதான் ஜனநாயக மரபாகும். அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஒழுங்கீனங்கள் முறைகேடுகள், ஊழல் மோசடிகளை கண்டறிந்து அவற்றுடன் தொடர்புட்டவர்கள் எத்தகைய தராதரத்தைக் கொண்டவர்களானாலும் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். இதன் பொருட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம், உளவுப் பிரிவு அதிகாரிகளுக்கும் அதிகாரங்களை வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இலஞ்சத்தோடு தொடர்புட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு சரியான வழி இதுவொன்றுதான். சட்டத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிபடுத்த வேண்டும். இதில் பாரபட்சம் காட்டப்படவே கூடாது.

அரச துறைகளில் செயற்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக கடந்த கால அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வெறுப்புக் கொண்டிருந்தனர். பதவிக்கு வரும் அரசுகள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் கால வாக்குறுதிகளாக மட்டுமே காணப்பட்டன. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த வாக்குறுதி கலாசாரம் மேடையேறப்பட்ட வண்ணமே அமைந்திருந்தன. இதனால் அரசுகள் மீதான மக்களது நம்பிக்கை வீணடிக்கப்பட்டன. தனது பதவிக் காலத்தில் இது போன்ற நம்பிக்கையீனங்களுக்கு இடமளிக்க முடியாது என்பதில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்.

எதிர்காலத்தில் அரச சேவையின் உயர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்கும் போது செயற்திறன், நிபுணத்துவம் என்பன கவனத்தில் கொள்ளப்படுமென்ற ஜனாதிபதியின் நிலைப்பாடும் வரவேற்கக் கூடியதே. உயர் படிப்பு படித்துவிட்டால் மட்டும் உயர் பதவிக்கு தகுதியாகிவிட முடியாது. செயற்திறனும் நிபுணத்துவம் மிக முக்கியமானதாகும். இதில் திறமையுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி புத்திஜீவிகள் குழுவை அமைத்து செயற்திறன் மிக்கவர்களை தெரிவு செய்ய முடிவு செய்திருக்கின்றார். காலம் கடத்தாமல் கூடிய விரைவில் அரசு துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதே ஜனாதிபதியின் இலக்காகக் காணப்படுகின்றது.

அரசு துறையில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி ஊழியர்கள் செயற்திறன் மிக்கவர்களாக மாற்றப்பட வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்து விட்டால் போதுமென்ற நிலைமாற வேண்டும். நாடு செழிக்க வேண்டும், உலகில் நம் நாடு தலை நிமிர வேண்டும். இந்த நல்லெண்ணம் ஒவ்வொருவர் மனங்களிலும் உருவாகவேண்டும். உலகளவில் நாம் இனியும் பின்தள்ளப்படக் கூடாது. எதிர்காலம் எமது கைகளிலேயே தங்கியுள்ளது என்ற மனப்போக்கு அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.

அனைத்து அரச நிறுவனங்களும் செயற்தின் மிக்கதாகவும் மக்களுக்கு நெருக்கமுடையனவாகவும் தூய்மை மிக்கதாகவும் மாற்றமடைய வேண்டும். கால விரயங்கள் அகற்றப்பட வேண்டும் அலுவலகங்களுக்கு தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ளவரும் மக்கள் வெறும் கையோடு திரும்ப வாய்ப்பளிக்கப்படக் கூடாது. முடியுமான அளவு விரைவாக அவை நிறைவேற்றிக் கொடுக்கப்படுவதை அரசு ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதனைச் செய்யத் தவறுபவர்கள் செயற்திறனற்றவர்களாக கருதப்பட வேண்டியுள்ளது. அப்படியான செயற்திறனற்ற அதிகாரிகள் பதவிகளிலிருந்து நீக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். சிலருக்கு, இது கசப்பாக இருக்கலாம் ஆனால் அதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமையுமானால் அதனைச் செய்வது தப்பாக முடியாது.

இன்று அரச சேவையில் 15 இலட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் நேர்மையுடன் தமது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவரும் ஒரு காலத்தில் அரச ஊழியர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க முடிகிறது. அவரது அரச சேவை மிக நேர்மைமிக்கதாகவே அமையப் பெற்றிருந்ததை கண்கூடாகக் காணமுடிகின்றது இது நல்லதொரு முன்மாதிரியாகும்.


Add new comment

Or log in with...