வசூலை அள்ளிக் குவித்த படங்கள்! | தினகரன்

வசூலை அள்ளிக் குவித்த படங்கள்!

2019-ம் வருடத்தின் ஆரம்பமும் முடிவும் தமிழ் சினிமாவுக்கு அற்புதமாக அமைந்துவிட்டன. கடந்த வருடம் பெரிய ஏமாற்றங்கள் இன்றி ஏராளமான படங்கள் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 9தமிழ்ப் படங்கள் சூப்பர் ஹிட் என்கிற அந்தஸ்தை அடைந்துள்ளன.  

1. பிகில்

விஜய் ரசிகர்களுக்கு கடந்த வருடம் கொண்டாட்டமான தீபாவளியாக அமைந்துவிட்டது.  

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கினார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகிய படம் இது. சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கின. கடந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலை எட்டிய தமிழ்ப் படம் பிகில் என்று கூறப்படுகிறது.   விஜய்யின் புகழை மேலும் ஒரு படி உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ள படம் இது.  

2. பேட்ட

ரஜினியை முதல் முதலாக இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற பாராட்டுகளை ரசிகர்களிடமிருந்து பெற்றார். கபாலி, கதை போன்ற தீவிரமான கதைகளாக இல்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையமைத்து வெற்றி கண்டார் கார்த்திக் சுப்புராஜ். அஜித்தின் விஸ்வாசத்தோடு பொங்கலுக்கு வெளியான பேட்ட, தமிழ்நாட்டில் விஸ்வாசத்தை விடவும் சற்று குறைவான வசூலைப் பெற்றாலும் உலகளவில் அதிக வசூல் பெற்று ரஜினியின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டியது.  

3. விஸ்வாசம்

ஒரே நாளில் இரு பெரிய படங்களா எனப் பலரும் பயந்தார்கள். ஆனால் பேட்ட, விஸ்வாசம் என இரண்டுமே வெற்றி பெற்று தமிழ்த் திரையுலகுக்கு மகிழ்ச்சியை அளித்தன. குடும்பப் பாங்கான படம் என்பதால் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குக்கு வந்தன. இமானின் கண்ணான கண்ணே பாடல் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இந்தப் படத்தின் மெகா வெற்றி தான் இயக்குநர் சிவாவுக்கு அடுத்ததாக ரஜினியை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.  

4. நேர்கொண்ட பார்வை

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக். அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் எப்படி பொருத்தமாக இருப்பார் என்கிற கேள்வி உருவானது. ஆனால் இயக்குநர் வினோத், அஜித்துக்கு ஏற்ப சண்டைக்காட்சிகளை வைத்து சரியாகச் சமாளித்துவிட்டார்.

இதுபோன்ற ஒரு கதையில் அஜித் போன்ற பெரிய நடிகர் நடிப்பது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று பலரும் பாராட்டும் விதத்தில் படத்துக்கு வெற்றி கிடைத்தது. அஜித் திரையுலக வரலாற்றில் ஒரு கெளரவமான வெற்றி என்று இப்படத்தைச் சொல்லலாம்.  

5. காஞ்சனா 3

முனி கதை வரிசையின் நான்காவது பாகம் இது. காஞ்சனாவின் 3-வது பாகம். வழக்கம்போல நடித்து இயக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் விமரிசனங்கள் சாதகமாக அமையாவிட்டாலும் வசூலில் ரூ. 100கோடியைத் தொட்டது காஞ்சனா 3. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வெளியிட்டதால் நல்ல கவனமும் கிடைத்தது.  

6. அசுரன்

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்தார்கள். இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். ஒக்டோபர் 4அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.  

7. கைதி

பிகில் படத்துக்குப் போட்டியாக தீபாவளி சமயத்தில் வெளியான கைதி படம் ரூ. 100கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது.  

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கியுள்ளார். இசை - சாம் சிஎஸ். பாடல்களும் இல்லாமல் கதாநாயகி என்கிற கதாபாத்திரமும் இல்லாமல் எனவே துளிக் காதல் காட்சிகளும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் வசூலில் ரூ. 100கோடி வசூலை அடைந்தது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.  

8. நம்ம வீட்டுப் பிள்ளை

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் - நம்ம வீட்டுப் பிள்ளை. சிவகார்த்திகேயன் நடித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்தார்.   கடந்த வருட ஹிட் படங்களில் நம்ம வீட்டுப் பிள்ளையும் இடம்பெற்று விட்டது.  

9. கோமாளி

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஓகஸ்ட் 15 அன்று வெளியானது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. படம் வெளியான முதல் நாளிலிருந்து கோமாளி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளார்.  


Add new comment

Or log in with...